கோடிகளைச் சுருட்டிய நிதி நிறுவனம் சூறை! 'நாங்கள் என்ன செய்வோம்' என ஏமாந்தவர்கள் கதறல்

சிட்பண்ட்ஸ்

கட்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றிய தனியார் நிதி நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் அடித்துச் சூறையாடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் கடந்த நான்கு வருடங்களாக 'திரிபுரா சிட்பண்ட்ஸ்' என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் இயங்கிவந்தது. இந்நிறுவனத்துக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் 254 கிளைகளும் தமிழகத்தில் 84 கிளைகளும், கடலூர் மாவட்டத்தில் 5 கிளைகளும் உள்ளன. சிதம்பரம் கிளையைக் கேரள மாநிலத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் நடத்திவந்தார். இதில் நூற்றுக்கணக்கானோர் மாதாந்திர தவணைச் சீட்டு மூலம் தங்கள் பணத்தை முதலீடு செய்துவந்துள்ளனர். சீட்டு கட்டிய வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்ட காசோலைகள், வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டதற்கு அலுவலக ஊழியர்கள் சரிவர பதில் சொல்லவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள், அந்நிறுவனத்துக்குள் புகுந்து கம்ப்யூட்டர், கண்ணாடி, ஜன்னல்களை அடித்து சூறையாடியதுடன், அங்கிருந்த ஆவணங்களைக் கிழித்தெறிந்தனர்.

"எங்களிடம் சீட்டு கட்டினால், சீட்டு முடிந்ததும் கட்டிய பணத்துக்கு இரு மடங்காகப் பணம் கொடுப்போம்" என்று சொன்னார்கள். அதை நம்பி, கந்துவட்டிக்குப் பணம் வாங்கி பழக்கடை வைத்தால் கடனிலிருந்து மீளமுடியாது என்றெண்ணி, மாதாந்திர சீட்டு மூலம் பணம் சேர்க்கலாம் என்று நினைத்தேன். பழக்கடை வைப்பதற்காக தினமும் கூலி வேலைக்குப் போய் குருவி சேர்ப்பதுபோல் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து சீட்டு கட்டி வந்தேன். வரும் தை மாசம் கடையை ஆரம்பித்துவிடலாம் என்று சீட்டை எடுத்தேன். அவர்களும் நான் கட்டிய பணத்துக்கு வட்டியும் முதலுமாக செக் கொடுத்தார்கள். அந்த செக்கை வங்கியில் போட்டால் பணம் இல்லையென்று சொல்கிறார்கள். என்னைப்போல் நூற்றுக்கணக்கான பேருக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் அவர்களை ஏமாற்றிவிட்டு கோடிக்கணக்கான பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்கள். நான் என்ன செய்வேன் என்றே தெரியவில்லை" என்று தலையில் அடித்துக்கொண்டு கதறினார் பாதிக்கப்பட்ட ஒருவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!