வெளியிடப்பட்ட நேரம்: 07:09 (08/11/2017)

கடைசி தொடர்பு:07:09 (08/11/2017)

"மக்கள் நலனைப் பாதுகாப்பதில் எடப்பாடி அரசு தோல்வி...!'' - வெடிக்கும் வேல்முருகன்

மிழ்நாட்டு மக்கள் நலன்களைப் பாதுகாக்க முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு தவறிவிட்டதாகவும், அனைத்துத் துறைகளிலும் இந்த அரசு தோல்வியடைந்து விட்டதாகவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் குறைகூறியுள்ளார்.

"தமிழக மக்களின் தன்மானம், இனமானம், மொழியுரிமை, வாழ்வுரிமை ஆகியவற்றை விழிப்புடன் பேணிகாக்க, தன்னலம் நீக்கித் தமிழ் மக்களின் நலம் காக்க உருவாக்கப்பட்ட 'தமிழக வாழ்வுரிமை கட்சி' அப்பழுக்கற்ற ஆட்சி நிர்வாகத்தைத் தர அரசியல் பயணத்தில் சுழன்று கொண்டிருக்கிறது" என்று நெய்வேலி மாநிலச் செயற்குழுவில் முழங்கிய அக்கட்சியின் தலைவர் வேல்முருகனை சென்னையில் சந்தித்தோம்.

''கட்-அவுட், பேனர் வைப்பதில் சாட்டையைச் சுழற்றி இருக்கிறதே உயர்நீதிமன்றம்?''

வேல்முருகன்

''திறந்தவெளிகளைப் பாதுகாக்க அக்கறை எடுப்பதுபோல மக்களையும், தமிழகத்தின் இயற்கை வளங்களையும் பாதுகாக்க, நீதித்துறை சாட்டையைச் சுழற்ற வேண்டும். மதுவின் கொடுமையால் இளைய சமூகத்தினர் சீரழிந்து கொண்டிருக்கின்றனர். அவர்களைக் காப்பாற்ற அரசு என்ன செய்யப்போகிறது?''

'' 'ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 31-ம் தேதிக்குள் நடத்தப்படும்' என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளாரே?''

''முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், பணப்பட்டுவாடா செய்ததற்கு ஆதாரமாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாலேயே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது. சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது வழக்குத் தொடுக்குமாறு, தாக்கீது அனுப்பியும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, ஏற்கெனவே நடந்த தவறுகள் மீது விசாரணை நடத்தி சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பிறகே ஆர்.கே.நகர் தேர்தலை நடத்த வேண்டும்."

''எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நீடிக்கத் தகுதியில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே?''

''தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தும் அரசியல் கட்சி எது. அந்தக் கட்சியின் பெயர் இன்னதென்று இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதை, தமிழக ஆளுநர் தெளிவுபடுத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் உடனே உத்தரவிட வேண்டும். ஆட்சியில் நீடிக்கும் தார்மீக உரிமையை எடப்பாடி எப்போதோ இழந்து விட்டார்."

''தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் தீவிரம் குறைந்துவிட்டது என்கிறதே மாநிலச் சுகாதாரத்துறை?''

''இன்னமும் டெங்குக் காய்ச்சலின் தீவிரம் குறையவில்லை. தற்போதும் தமிழகம் அந்தநோயின் கோரப்பிடியில்தான் சிக்கியுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் எனத் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு சிதைவுற்றதும் மக்களின் அடிப்படை ஆதாரங்கள் மற்றும் நல்வாழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய உள்ளாட்சி அமைப்புகள் செயலிழந்ததுமே டெங்கு பரவியதற்குக் காரணம். எனவே, உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்''.

டெங்கு

''எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை, 'எடப்பாடி பழனிசாமி' கொண்டாடுவதை நீங்கள் எதிர்ப்பது ஏன்?''

''தமிழகத்தில் எந்தவொரு முதல்வரும் அரசுப் பணத்தில் நூற்றாண்டு விழாக்களை மாவட்டந்தோறும் இப்படிக் கொண்டாடியது இல்லை. மக்கள் நலப் பணிகளுக்கே பணமில்லாமல் திண்டாடும்போது, இத்தகையக் கொண்டாட்டங்கள் எல்லாம் தேவையா?''.

''தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீண்டும் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்களே..?''

''நீதிமன்றம் தலையிட்டும் அரசு ஊழியர்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. நிலுவைத்தொகையை வழங்கி, அவர்கள் கேட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையையும், ஊதிய உயர்வையும் வழங்கி அவர்கள் மீண்டும் போராட்டத்தைத் தொடங்காமல் தடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்குக் குறைந்தபட்சம் மாத ஊதியம் ரூ.20,000 என்று மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதை கேரள அரசு உடனே நிறைவேற்றிவிட்டது. தமிழக அரசும் அதை அமல்படுத்த வேண்டும்''.

''அரசு செவிலியர்கள் போராட்டமும் தீவிரமடைந்து உள்ளதே..?''

''மத்திய அரசின் உத்தரவின்படி, மருத்துவப் பணிகள் தேர்வாணையம் மருத்துவத்துறைப் பணிகளுக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் எம்.ஆர்.பி என்ற தகுதித் தேர்வை நடத்தி வருகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சிபெற்ற சுமார் 11 ஆயிரம் செவிலியர்கள் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு மாத ஊதியமாக வெறும் ரூ.7,700 மட்டுமே வழங்கப்படுகிறது. அதேசமயம், 12 மணி நேரம் பணி அளிக்கப்படுகிறது. எனவே, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, குறைந்தப்பட்ச மாத ஊதியமாக ரூ.32 ஆயிரம் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பி வேலை நேரத்தை எட்டு மணி நேரமாக உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.ஆர்.பி செவிலியர் சங்கத்தினர் கடந்த 1-ம் தேதி முதல் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, அரசு செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்''.

''சமூக ஆர்வலர்கள், தமிழ் தேசியம் பேசுவோர் கைது செய்யப்படுகிறார்களே?''

''மக்களுக்காகக் குரல் கொடுப்போரைக் கைது செய்தல் அல்லது அவர்கள்மீது தேசத்துரோக வழக்கைப் பாய்ச்சுதல் என்பது சர்வாதிகாரத்தனம். இது அரசமைப்புச் சட்டம் வழங்கும் பேச்சுரிமை, எழுத்துரிமை மற்றும் கருத்துரிமைக்கு முரணானது; மக்களாட்சி மற்றும் ஜனநாயக மாண்புகளுக்கே எதிரானது. ஆனால், எல்லா வகையிலும் தோல்வியையே கண்டிருக்கும் மத்திய - மாநில அரசுகள் அந்தத் தோல்வியை மறைக்கும் நோக்கில், அந்தத் தோல்வியைச் சுட்டிக் காட்டுவோர்மீது பாய்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது கார்ட்டூனிஸ்ட் பாலாவையும், வழக்கறிஞர் செம்மணியையும் கைது செய்தனர்''.

மழை வெள்ளம்

''வடகிழக்குப் பருவமழையால் வெள்ளத்தில் சென்னை மிதக்கிறதே?''

''சென்னை மட்டுமல்ல, கடலோர மாவட்டங்கள் அனைத்தும் இந்த மழைக்குக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 2015-ம் ஆண்டு பேய் மழை, அடுத்து வார்தா புயல், பின்னர் வறட்சி என்று அடுத்தடுத்த சோதனைகளைத் தமிழக மக்கள் சந்தித்துத் துவண்டு போய் இருக்கிறார்கள். இந்த ஆண்டு பருவமழை சரியாக வந்தே தீரும் என்று வானிலை ஆய்வு மையங்கள் முன்கூட்டியே சொல்லிவிட்டன. ஆனாலும், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் எவ்வித முன்னேற்பாடுகளையும் தமிழக அரசு செய்யவில்லை. 

அ.தி.மு.க கோஷ்டி சண்டையில் ஒருவரை ஒருவர் காலை வாருவதில்தான், நேரத்தைச் செலவிடுகிறார்களே தவிர, நாட்டு மக்களைப் பற்றி அவர்களுக்குத் துளியளவுகூட அக்கறை இல்லை. காலை வாருவதை விட்டுவிட்டு, நீர் நிலைகளைத் தூர்வாரி இருந்தால் மழைவெள்ள பாதிப்புகள் இந்த அளவுக்கு ஏற்பட்டிருக்காது. சென்னை மாநகரை மழை வெள்ளம் போன்ற பேரழிவுகளிலிருந்து, எதிர்காலத்திலாவது காப்பாற்ற தனியாக ஒரு அமைச்சரை நியமித்து, போர்க்கால அடிப்படையில் உடனே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சென்னை மாநகருக்கு 2015-ம் ஆண்டுக்குப் பிறகு உள்கட்டமைப்பு, மழை வெள்ள நீர் கால்வாய் வெட்டுதல், சீர் படுத்துதல் என்று ரூ.1,000 கோடிக்கு மேல் செலவு செய்திருப்பதாக உள்ளாட்சித் துறை சொல்கிறது. அந்தப் பணம் எங்கே போனது. எனவே, செலவுகள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்''.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்