பொதுமக்களைக் கவரும் எருக்கை வேரில் செய்யப்பட்ட விநாயகர் சிலை..! | People were like white root Vinayagar statue done by whit root

வெளியிடப்பட்ட நேரம்: 00:32 (08/11/2017)

கடைசி தொடர்பு:08:45 (08/11/2017)

பொதுமக்களைக் கவரும் எருக்கை வேரில் செய்யப்பட்ட விநாயகர் சிலை..!

''வீட்டுக்குள் காத்து கறுப்பு  அண்ட விடாது. நோய் நொடிகளை ஏற்பட விடாது. குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இந்த வெள்ளை எருக்கை வேர் விநாயகரை வைத்தால் குழந்தைகள் திடீர் திடீரென அழாது. அதனால் மக்கள் ஆர்வமாக இந்த விநாயகர் பொம்மையை வாங்கிச் செல்கிறார்கள். அதனால் என் வாழ்க்கையும் நகருகிறது'' என்கிறார் சாலையோர பொம்மை விற்பனையாளர் ருக்மணி. 

இதுபற்றி  அவரிடம் கேட்டபோது, ''நான் வீராணம் அருகே உள்ள வலசையூரில் இருந்து வரேன். என் வீட்டுக்காரர் பேரு மதுரைவீரன். 30 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து போயிட்டாரு. எங்களுக்கு ராஜேந்திரன் என்ற ஒரு பையன். அவனுக்கு திருமணம் ஆகி மனைவி, குழந்தைகளோடு தனியாக இருக்கிறான். நான் கூலிக்கு காடுகளில் பூப்பறிக்கும் வேலைக்குப் போயிட்டு இருந்தேன். இப்ப எனக்கு 60 வயதைத் தாண்டிவிட்டது. அதனால் காட்டு வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டில் இருந்தேன். என் பையன் இந்த பொம்மை வியாபாரம் செஞ்சுட்டு இருந்தான். நல்ல வருமானம் கிடைத்தது. ஆனாலும் அவனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால், ஒரு வேலையை சரியாக செய்ய மாட்டான். அதையடுத்து நான் இந்த பொம்மை வியாபாரத்துக்கு வந்தேன்.


எங்க ஊரு மாதிரி இருக்கிற கிராமத்துல வெள்ளை எருக்கை செடி இருக்கும். அந்த செடியின் வேரை பறித்துச் சென்று நாமக்கல் போதப்பட்டி உள்ள பொம்மை செய்பவர்களிடம் கொடுத்தால் ஒரு வேருக்கு 10 விநாயகர் சிலை செய்யலாம். நாங்க மொத்தமாக 100 சிலைக்கு 1,500 ரூபாய் கொடுத்து வாங்கிட்டு வருவோம். இங்கு ஒரு விநாயகர் சிலை 20 முதல் 30 ரூபாய் என்று விற்பனை செய்கிறோம். ஒரு நாளைக்கு எனக்கு 100 முதல் 150 ரூபாய் வருமானம் வருகிறது. அது என் சாப்பாட்டு செலவுக்கு ஆகிறது. 

இந்த விநாயகரை வீட்டில் வைத்தால் காத்து, கறுப்பு வராது. எந்த கெட்ட ஆவியும் வீட்டுக்குள் புகாது. வீட்டில் உள்ளவர்களுக்கு நோய், நொடி ஏற்படாது. குறிப்பாக குழந்தைகள் இருக்கும் வீட்டில் வைத்தால் குழந்தை பயந்துகொண்டு திடீர் திடீரென அழாது என்பதாலும் பொம்மைகள் அழகாகவும், குறைந்த விலையில் கிடைப்பதாலும் பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கிறார்கள். இதனால் என் வாழ்க்கை ஓடுகிறது'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க