தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்! | Heavy rain expected in southern TN districts

வெளியிடப்பட்ட நேரம்: 09:16 (08/11/2017)

கடைசி தொடர்பு:09:19 (08/11/2017)

தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்!

டெல்டா பகுதிகள் மற்றும் தமிழகத்தின் தென் கடலோரப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தீவரமடைந்துள்ளது. இந்நிலையில், தென் தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கனமழை


கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை, வட தமிழக மாவட்டங்களில் நல்ல மழைப்பொழிவைத் தந்தது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்துவருகிறது. தற்போது, இம்மாவட்டங்களில் மழை குறையத் தொடங்கியுள்ளது. அதேவேளை, தென் தமிழக மாவட்டங்களில் மழை தீவிரமடைய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம், `இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இருந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை வலுவிழந்துள்ளது. ஆனால், தற்போது கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இது மேலும் தீவிரமடையும். இதனால், அடுத்து 24 மணி நேரத்தில், தென் தமிழகத்தின் அநேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என்று தெரிவித்துள்ளது.