வெளியிடப்பட்ட நேரம்: 10:41 (08/11/2017)

கடைசி தொடர்பு:10:57 (08/11/2017)

‘மழைக்குத் தாங்காதுன்னு அப்பவே சொன்னோம்!’ இடிந்த சென்னை கட்டடத்தின் பின்னணி

கட்டடம், building

சென்னை மாநகரில் குவிந்து கிடக்கும் பழைமையான கட்டடங்கள், தலைநகரின் முக்கிய அடையாளங்கள். பிரிட்டிஷ் கால கட்டடங்களான இவைகளே பூர்வ சென்னையின் உண்மை முகத்தை பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நூற்றாண்டு கண்ட மாற்றத்தை பழுப்பேறிய தங்கள் சுவர்களின் வழியாக நமக்குச் சொல்லிக்கொண்டு இருப்பவை இந்த ‘மூதாதை’ கட்டடங்கள். ஆனால், இந்த அடையாள கட்டடங்களில் பலவும் இன்று வலுவிழந்து, அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. மழை, வெயிலுக்குத் தாக்குபிடிக்க இயலாமல் ஒவ்வொன்றாக விடைபெறத் தொடங்கிவிட்டன. சென்னை, கிளைவ் பேட்டரி பேருந்து நிலையம் அருகே இருந்த பழைய கட்டடம் ஒன்று நேற்று இரவு இடிந்து விழுந்திருக்கிறது.

building, கட்டடம்

சுமார் 100 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடம் இது. சென்னை, ராஜாஜி சாலையில் அமைந்துள்ள இந்தக் கட்டடம் நேற்று இரவு 9.45 மணி அளவில் இடிந்து விழுந்திருக்கிறது. இரண்டு அடுக்குமாடிகளைக் கொண்ட இந்தக் கட்டடம் தனியாருக்கு சொந்தமானது. பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்று இங்கு செயல்பட்டு வந்திருக்கிறது. பிறகு, நீண்ட வருடங்களாக பயன்பாட்டில் இல்லாமல் பூட்டியே கிடந்திருக்கிறது. உறுதித்தன்மையை இந்தக் கட்டடம் இழந்துவிட்டது என்றும், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் எனவும், அப்பகுதி மக்கள் கூறிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். சமீபமாக சென்னையில் பெய்துவரும் கனமழையால் இந்தக் கட்டடம் பாதிக்கப்பட்டிருந்ததாக அப்பகுதிவாசிகள் எச்சரித்திருக்கின்றனர். அவர்கள் எச்சரித்ததுபோலவே இந்த கட்டடத்தின் முன்பகுதி நேற்றைய மழைக்கு இடிந்து விழுந்திருக்கிறது. துறைமுகம், கடற்கரை ரயில் நிலையம், சுங்கத்துறை அலுவலகம், முக்கிய அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையம், பர்மா பஜார் என பரபரப்பாக இயங்கும் இந்த சாலையில் கூட்ட நெரிசல் எப்போதும் உச்சம்தான். ஆனால், கட்டடம் இடிந்தபோது மழை பெய்துகொண்டிருந்ததால் மக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்திருக்கிறது. இதனால்தான் யாரும் பாதிக்கப்படாமல் தப்பித்திருக்கிறார்கள்.

கட்டடம், building

உடனடியாக தீயணைப்புப் படையினர், போலீஸார், மாநகராட்சி உயர் அதிகாரிகள் அங்கு குவிந்தனர். இடிந்த கட்டடத்தைச் சுற்றியும் பொதுமக்கள் வசித்துவருகின்றனர். பாதுகாப்புக்கு வந்த போலீஸார் அவர்களை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தினர். பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜாஜி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இடிந்த கட்டடத்தை சுற்றியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு முழு இடிப்பு பணிக்காக திட்டமிடப்பட்டது. சம்பவ இடத்துக்கு துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ சேகர்பாபு வந்தார். அப்போது பேசிய அவர், ‘துறைமுகம் தொகுதியில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட ஆபத்தான பழைய கட்டடங்கள் உள்ளன. விபரீதமாக ஏதும் நடப்பதற்குள் அவற்றை போர்க்கால அடிப்படையில் அரசு அகற்ற வேண்டும்’, என கோரிக்கை வைத்துவிட்டுச் சென்றார். பிறகு, சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வந்தார். அவரிடம் சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை இணை ஆணையர் ஆகியோர் சம்பவத்தை விளக்கினர். பிறகு பேசிய அமைச்சர், “போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காலைக்குள் இடம் சீரமைக்கப்படும். பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பில்லை.”, என்றார். கட்டட இடிப்பு பணியின்போது தொடர்ந்து மழைக் குறுக்கிட்டதால் பணியில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், இரவு 2 மணிக்குள் மொத்த கட்டடமும் இடித்து முடிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜே.சி.பி வாகனங்கள் மூலம் அங்கிருந்த இடிபாடுகளை நீக்கும் பணி நடைபெற்றுவருகிறது. 

building, கட்டடம்

சுற்றுபுற மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, சற்று தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டனர். கண் எதிரே அவ்வளவு பெரிய கட்டடம் இடிந்து விழுந்ததை பார்த்த அதிர்ச்சியில் இருந்து அவர்கள் மீளவே இல்லை. இறுதியாக அப்பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் நம்மிடம் பேசியபோது, “இந்த பில்டிங்க சுத்தியிருக்குற சின்ன சந்துகள்லதான் நாங்க இவ்வளவு வருஷம் இருக்கோம். அய்யாசாமி முதல் சந்து, இரண்டாவது சந்து பூரா எங்க ஜனங்கதான். இந்த பில்டிங் இடிஞ்சத இப்போதான் நேர்ல பார்த்தோம் சார். மழைக்கு இது தாங்காதுன்னு சொல்லிட்டேதான் இருந்தோம். தோ.. போச்சுல. இவங்க இன்னும் முழுசா இடிச்சு முடிக்கல. அதனால வீட்டுல படுக்க பயமாக இருக்குங்க. ஒரு ரெண்டு நாள் வெளிய எங்கயாச்சு போய் தங்கப்போறோம்.”, எனக் கூறிவிட்டு விடைபெற்றார்.


டிரெண்டிங் @ விகடன்