வெளியிடப்பட்ட நேரம்: 12:56 (08/11/2017)

கடைசி தொடர்பு:13:08 (08/11/2017)

ஆற்றின் குறுக்கே சாலை... நடவடிக்கை எடுத்த ஆட்சியர்! மீட்கப்பட்ட கொசஸ்தலை நீரோட்டம்

கொசஸ்தலை, அடையாறு, கூவம் இந்த மூன்றும் சென்னையின் முக்கியமான ஆறுகள். இன்னும் சொல்லப்போனால் கொசஸ்தலை ஆறுதான் இந்த மூன்றிலும் அதிமுக்கியமானது எனலாம். காரணம், ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் சோளிங்கர் மலை அடிவாரத்திலிருந்து உற்பத்தியாகும் நீரும் வேலூர் காவேரிப்பாக்கம் ஏரி வழியாக வெளியேறும் பாலாற்றின் உபரி நீரும்தான் கொசஸ்தலையாகவும், கூவம் ஆறாகவும் சென்னையில் பிரிகிறது. சென்னை நகருக்குள் மொத்தம் 16 கிலோ மீட்டர்வரை ஓடும் இந்த கொசஸ்தலை ஆறானது, திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் அருகே கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில்தான் பல ஆக்கிரமிப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

கொசஸ்தலை ஆறு

ஆற்றின் முகத்துவாரத்தில் இருக்கும் எண்ணூர் துறைமுகம் தொடங்கி மற்ற பல தொழிற்சாலைகளின் கழிவுகள் ஆற்றின் ஒருபக்கம் தேக்கம் அடைவதால் முக்கிய சூழலியல்சார்ந்த பகுதியாக இருந்த கொசஸ்தலை இன்று இருந்த இடம் தெரியாமல் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த 2012-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், தற்போதைய எண்ணூர் அனல்மின் நிலையத்தைவிட குறைந்த உற்பத்திப்பொருளில் அதிக மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட எண்ணூரில் மாற்று அனல்மின் நிலையம் அமைப்பதற்கான பணிகள், லான்செட் என்னும் தனியார் கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கான மேலாண்மைப் பணிகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மேற்கொண்டு வந்தது. 

அதற்காக, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தற்காலிக சாலை ஒன்றை அமைத்து அனல்மின் நிலைய கட்டுமானத்துக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், திடீரென்று கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்காலிகச் சாலையை அகற்றக்கோரி எண்ணூர் கழிமுகப்பகுதி மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். தற்போது பலத்த மழைக்கு இடையே அந்த சாலையை அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளார் ஆட்சியர் சுந்தரவல்லி. 

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி

இதுபற்றி எண்ணூர் பகுதி மீனவர்கள் சங்கத்தைச் சேர்ந்த சீனுவாசன் என்பவர் கூறுகையில், “அனல் மின் நிலையம் கட்ட கன்வேயர் பெல்ட் அமைக்கப்பட இருக்கிறது. ஆனால், அது அமைக்கப்பட இருக்கும் இடைப்பட்டமூன்றுமாத காலத்துக்கு மட்டும் ஆற்றின் குறுக்கே தற்காலிக சாலை அமைக்கப்படும் என்றார்கள். ஆனால், கன்வேயர் பெல்ட் அமைக்கப்படவில்லை. அனல்மின் நிலையக் கட்டுமானப் பணிகளும் காரணம் அறிவிக்கப்படாமல் முடங்கின. மூன்று மாதத்துக்குப் பிறகு அகற்றப்படும் என்று சொன்ன தற்காலிக சாலை அப்படியே இருந்தது. ஆற்றின் குறுக்கே சாலை அமைக்க அவர்கள் முறையாக அனுமதி வாங்கியிருக்கவில்லை. கூடவே, சாலையின் அமைப்பு நீரோட்டத்தை பாதிப்பதாக இருந்தது. முகத்துவாரத்தில் நீரோட்டத்தில் பாதிப்பு ஏற்படுவதால் வேறு சில பகுதிகளில் நீரின் அளவு அதிகரித்து தேங்கும் அபாயம் ஏற்பட்டது. இதற்காக, பசுமைத் தீர்ப்பாயத்தில் முறையிட்டோம். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத் தரப்பிடமும் முறையிடப்பட்டது. இதையடுத்து, ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட சாலையை அதிகாரிகள் ஆய்வுசெய்து, அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று அறிக்கை அளித்தார்கள். அதனை ஆதாரமாக வைத்து ஆட்சியரிடம் முறையிட்டோம். அதன்பேரில் ஆட்சியர் சாலையை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டார்” என்றார்.

ஏற்கெனவே, எண்ணூர் துறைமுகமும், தொழிற்சாலைகளும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதால் சாம்பல் கழிவுகளும், கழிவு நீரும், தொழிற்சாலை ரசாயனங்களும் ஆற்றில் கலக்கின்றன. எண்ணூர் பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரமும், கொசஸ்தலையும் இந்த மும்முனைத் தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பின் காரணமாக, மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு நிவாரணம் அளிப்பதைவிட இதுபோன்ற சாதுர்யமான நடவடிக்கைகள்தான் நிரந்தரத் தீர்வை அளிக்கும். ஆற்றின் குறுக்கே இருக்கும் சாலையின் ஆக்கிரமிப்பை அகற்றியதுபோல எண்ணூரில் இருக்கும் பிற ஆக்கிரமிப்புகளுக்கும் வழிவகை செய்யப்படுமா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்