'நாங்கள் அவர்களைப்போல காலில் விழவில்லை!' - கனிமொழி காட்டம் #Demonetization

கனிமொழி

"நாங்கள், பிரதமரை வரவேற்று கையைத்தான் கொடுத்தோம். மற்றவர்களைப் போல காலில் விழவில்லை" என்று கோவையில் தி.மு.க எம்.பி., கனிமொழி கூறியுள்ளார்.

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில், கடந்த ஆண்டு இதே நாளில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தது மத்திய அரசு. பிரதமர் நரேந்திரமோடி, இரவோடு இரவாக வெளியிட்ட இந்த அறிவுப்பு,  பல்வேறு வகையில் பொதுமக்களைப் பாதித்தது.  பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றோடு ஒரு வருடம் நிறைவடைந்துவிட்டது. இந்த நாளை, தி.மு.க-வினர் கறுப்பு நாளாக அறிவித்து, மாவட்டம்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்திவருகிறார்கள். கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கனிமொழி, 

"பிரதமர் நரேந்திர மோடி கலைஞரை சந்தித்ததால்,  இந்த ஆர்ப்பாட்டம் நடக்குமா... நடக்காதா என்று எல்லோரும் சந்தேகப்பட்டார்கள். நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை வாபஸ் வாங்கிவிட்டதாக சில பத்திரிகைகள் தலையங்கம்கூட எழுதின. தளபதி ஸ்டாலின், கலைஞரின் பிள்ளை. 'உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்' என்று சொன்ன கலைஞரின் பிள்ளை. பிரதமரிடம் கை கொடுத்துதான் நாங்கள் வரவேற்றோம். மற்றவர்களைப்போல காலில் விழவில்லை.  உரிமைக்கான குரல் எழுப்ப தி.மு.க என்றும் தவறியது இல்லை.

சென்ற ஆண்டு இதே நாளில்,  மத்திய அரசு எடுத்த நடவடிக்கையை யாரும் மறந்துவிட முடியாது. வங்கியின் முன்பு நாள் கணக்கில் மக்கள் காத்திருந்ததையும் சாப்பிடக்கூட பணம் இல்லாமல் தவித்ததையும் எப்படி மறக்க முடியும்? இந்த நடவடிக்கையால் எத்தனை உயிரிழப்புகள்  ஏற்பட்டன. கறுப்புப் பணத்தை ஒழிக்கப்போவதாகச் சொன்னார்கள். ஆனால், கறுப்புப் பணம் ஒழிந்தபாடில்லை. இதுவரை ஒரு சதவிகித கறுப்புப் பணம்தான் ஒழிக்கப்பட்டுள்ளது. மற்றவைகள் மீண்டும் வங்கி வழியாக வெள்ளையாக மாற்றப்பட்டுள்ளது. மக்கள் பணம் இல்லாமல் தவித்தபோது, இரண்டாயிரம் நோட்டு எப்படி இருக்கும் என்றே தெரியாமல் தவித்தபோது,  ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலரிடம் கோடிக்கணக்கில் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பிடிபட்டன. அதற்காகத்தான் மத்திய அரசு மக்களை வதைத்ததா? பற்றாத குறைக்கு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு ஜி.எஸ்.டி வரி என்று பல்வேறு வகைகளில் மக்களை நசுக்கிவருகிறது மத்திய அரசு. நாட்டின் பொருளாதாரம் முடங்கிவிட்டது. 

இதையெல்லாம் மாநில அரசு தட்டிக்கேட்காது. ஏனென்றால், அ.தி.மு.க-வில் அறிவாளிகள் நிறைந்திருக்கிறார்கள். நொய்யல் ஆற்றில் நுரைபொங்கினால், கோவை மக்கள் சோப்பு போட்டு குளிப்பதுதான் காரணம் என்று சொல்லும் அளவுக்கு அறிவாளியாக இருக்கிறார் சுற்றுச்சூழல் அமைச்சர். தெர்மாக்கோல் போட்டு அணையை மூடியவர்களுக்கு இதெல்லாம் சாதாரணம். டெங்கு எப்படி வருகிறது என்றால், டெல்லியில் இருந்து ட்ரெய்னில் வருகிறது என்று சொல்வார்கள். இந்த ஆட்சியை அகற்றினால்தான், தமிழ்நாடு முன்னேறும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!