வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (08/11/2017)

கடைசி தொடர்பு:16:45 (08/11/2017)

'பிணத்தை எரிக்கக்கூட, அந்தப் பணத்தை வாங்கவில்லை!' - கொதிக்கும் காங்கிரஸ் நிர்வாகி

பண மதிப்பிழப்பு தினமான இன்று, கறுப்பு தினமாக அறிவித்து காங்கிரஸ் கட்சியினர் இந்தியா முழுவதும் போராட்டத்தை நடத்திவருகிறார்கள். பல்லாவரம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில், காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களான பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, முன்னாள் மாநில துணைத்தலைவர் யசோதா , மாவட்டத் தலைவர் ரூபி மனோகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய பீட்டர் அல்போன்ஸ், ’வீடுகளில் வைத்திருந்த பணம், வங்கிகளில் வைத்திருந்த பணம், தாய்மார்கள் ஐந்தும் பத்துமாகச் சேர்த்து சுருக்குப் பையிலே வைத்திருந்த பணம் என எல்லாவற்றிற்கும், எந்தவித முகாந்திரமும் இல்லாமல் தனக்குத்தான் அதிகாரம் இருப்பதாகச் சொல்லி, ஒரேயொரு வானொலி உரை மூலம் உரையாற்றி, இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக்கிவிட்டார். கோடீஸ்வரனில் இருந்து குடிசை மக்கள் வரை அடுத்த நிமிடத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டிருந்த நேரம்.

பீட்டர் அல்போன்ஸ்,தங்கபாலு, காங்கிரஸ்

பால் வாங்க போனால் அந்தப் பணம் செல்லாது என திருப்பி அனுப்பப்பட்டார்கள். மருந்துக்கடைகளிலும் வாங்கவில்லை. கல்யாண சீர்வரிசை வாங்கவேண்டி கடைக்குப் போனால், அந்த பணத்தை யாரும் வாங்கவில்லை. சுடுகாட்டுக்கு பிணத்தை எடுத்துச்சென்று எறிக்க பணம் கொடுத்தால்கூட அதை யாரும் வாங்கவில்லை. எல்லோரும் வங்கிக்குப் போய் வரிசையில் நின்றார்கள். 4000 ரூபாய் கொடுப்பதாகச் சொன்னார்கள். கையிலே மை வைப்பதாகச் சொன்னார்கள். ஆதார் அட்டை கொண்டுவரச் சொன்னார்கள்.  நாள் முழுவதும் காத்திருந்தோம். இன்று இல்லை, நாளை வா என்றார்கள். நாம் சேமித்த பணத்தைக் கேட்டால், கொடுக்க மாட்டோம் என்று சொல்லக்கூடிய கொடுமையான அரசு, மோடி அரசு. உலகத்தின் வரலாற்றில் எந்த நாட்டிலும் இப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை.

”எனக்கு 50 நாள்கள் கொடுங்கள்.  இந்தியாவில் உள்ள பணக்காரர்களிடத்தில் இருக்கும் பணத்தையெல்லாம் உங்கள் வீட்டின் முன்பு கொண்டுவந்து கொட்டிவிடுகிறேன். கள்ளப்பணத்தை ஒழித்து, நாட்டின் பணப் பரிவர்தனையைப் புனிதமாக்குவேன். இல்லையென்றால், நான் ராஜினாமா செய்கிறேன்” என்றார். வங்கிகளில் நெருக்கடி தாங்காமல், அதன் வாயிலிலேயே 150 பேர் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உயிரைவிட்டார்கள். அந்த 150 குடும்பங்களின் நிலை என்ன ஆனது என இதுவரை மோடி கவலைப்பட்டிருப்பாரா? அவர்களுக்கு உதவித்தொகை கொடுத்திருப்பாரா? நீங்கள் செய்வது என்னவென்று தெரியாமல் செய்கிறீர்கள் என மோடியை எச்சரித்தார் பொருளாதார மேதையான மன்மோகன் சிங். அதற்கு முடிவுகளை எடுக்க முடியாமல் பிதற்றுகிறார் என்று சொன்னார்கள். ஜி.எஸ்.டி என்ற பெயரில் பொதுமக்களின் பணத்தை அடித்துச் சுரண்டுகிறார்கள். கார்ப்பரேட்டுகளுக்கு தரகு வேலை பார்க்கும் வேலையைத்தான் பிரதமர் மோடி செய்கிறார்’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க