புயல் முன்னெச்சரிக்கை என்ற பெயரில் மரங்களை வெட்டிவீசும் அதிகாரிகள்!

கடலூர் மாவட்டத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில், காய்ந்துபோன மரங்களை வெட்டுகிறோம் என்று நல்ல நிலையிலுள்ள மரங்களை வெட்டி வருகிறது மாவட்ட நிர்வாகம். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் பாபு பேசும்போது, "கடலோர மாவட்டமாக இருப்பதால், கடலூர் மாவட்டத்தைச் சுனாமி, நிஷா புயல், நீலம் புயல், தானே புயம், மழை வெள்ளம் என அடிக்கடி தாக்குகிறது. இவற்றால் அதிக அளவில் மரங்கள் சேதப்பட்டு சாய்ந்தபோதும், கடற்கரை சாலையில் உள்ள பல ஆண்டு வைரம் பாய்ந்த மரங்கள் கம்பீரமாகவும் அழகாவும் நிமிர்ந்து நின்றது. இப்போது, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் அவற்றில் பட்டுப்போன கிளைகளை வெட்டுகிறோம் என்று சொல்லி உயிரோட்டம் உள்ள மரக்கிளைகளை வெட்டி சாய்க்கின்றனர். ஏற்கெனவே இயற்கை சீற்றங்களால் ஆயிரக்கணக்கான மரங்கள் அழிந்துபோனதால் கோடை வெயில் இம்மாவட்டத்தைக் கொளுத்தி எடுக்கிறது.

தொகுதி அமைச்சர் எம்.சி.சம்பத் இம்மாவட்டத்தைப் பசுமை மாவட்டமாக மாற்றுவோம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் தொகுதியிலேயே இப்படி பெரிய பெரிய மரக்கிளைகளை வெட்டி சாய்க்கிறார்கள். மழைக்கு கால்வாய்களை வெட்டாமல் மரங்களை வெட்டுவதா மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை. கோடைக்காலம் என்றாலும் மழைக்காலம் என்றாலும் மக்களுக்கு தீராத வேதனையைத்தான் கொடுக்கிறார்கள் அதிகாரிகள். மாவட்ட நிர்வாகம் இப்போக்கை உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையென்றால், மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்துப் போராட்டம் நடத்தப்படும்" என்று எச்சரித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!