வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (08/11/2017)

கடைசி தொடர்பு:17:30 (08/11/2017)

தேங்கிக் கிடக்கும் குப்பைகள்! - எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தின் அவலம்

bus

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இப்பேருந்து நிலையத்தின் பெயரை அரசு சில நாள்களுக்கு முன் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் என்று மாற்றியது. இதற்குப் பலரும் ஆதரவும்  எதிர்ப்பும் தெரிவித்தனர். "பெயர் மாற்றுவது சரிதான் ஆனால், முதலில் பேருந்து நிலையத்தைச் சுத்தமாக மாற்ற வேண்டாமா. இப்படிச் சுகாதாரக் கேடா போட்டுவைத்துவிட்டுப் பெயரை மாற்றுவது ஒரு கேடா?"  என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மதுரை மாட்டுத்தாவணி பேருந்துநிலையத்தை சுற்றுப்பார்த்தோம். சமூக ஆர்வலர்கள் கூறியது போலவே மிகவும் சுகாதாரக் கேடாக இருந்தது மாட்டுத்தாவணி. நுழைந்த உடனேயே இருக்கும் டான் டீக்கடைக்கு அருகே உள்ள தண்ணீர் சப்ளை குழாய் செல்லும் இடத்தில் டான் டீக்கடையின் டீத்தூள் கழிவுகள் மொத்தமாகக் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசியது. அங்கு டீத்தூள் கழிவுகளைக் கொட்டுவதால் பொதுமக்கள் அதைக் குப்பைத் தொட்டியாக மாற்றிவருகின்றனர். எச்சில் துப்புவது, சிகரெட் துண்டுகளைப் போடுவது என்று மேலும் சுகாதாரக் கேடாக மாற்றிவருகின்றனர். வெளியூர் பேருந்துகள் கடந்து செல்லும் வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலைய மொத்த குப்பைகளும் கொட்டப்பட்டு பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. பெண்கள் கழிப்பறை பகுதி வெளியே உள்ள தண்ணீர் குழாயில்தான் தனியார் ஹோட்டலுக்குத் தண்ணீர் பிடித்து சமையலுக்குப் பயன்படுத்துகின்றதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

 

மாட்டுத்தாவணி

இப்படி பல பிரச்னைகள் மாட்டுத்தாவணியில் உள்ளது. ஆனால், மதுரை டெங்கு இல்லாத மாவட்டமாக உருவாக்குவோம் என்று வடக்கு தொகுதி எம்.எல்.ஏ ராஜன்செல்லப்பா பேனர்களில் விளம்பரம் செய்துவருகிறார். அவர் தொகுதிக்கு உட்பட்ட மாட்டுத்தாவணியைச் சுத்தம் செய்யாமல் மதுரை முழுவதும் எப்படி டெங்குவை ஒழிப்பார்! மாட்டுத்தாவணி பெயரை மாற்ற முதல் ஆளாக வந்த எம்.எல்.ஏ ஏன் சுகாதாரக்கேடான விசயங்களுக்கு நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்? என்பது பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது!