வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (08/11/2017)

கடைசி தொடர்பு:17:45 (08/11/2017)

விடுதலை செய்யக் கோரி இலங்கைச் சிறையில் தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம்!

இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 71 பேர் தங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கக் கடலின் பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் செல்வது அன்றாட நிகழ்வுகளாக நடந்து வருகிறது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகபட்டினம், தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 89 மீனவர்கள் தற்போது இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள்
 

இதில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 29 பேர் உட்பட 71 பேர் யாழ்ப்பாணம் சிறையிலும், எஞ்சிய 18 மீனவர்கள் வவுனியா சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள், தாங்கள் சிறை பிடிக்கப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகிய நிலையில் தங்களை விடுவிக்க நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை எனவும், தங்களை இந்தியத் தூதரக அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை எனவும் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் நீண்ட நாள்களாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் தங்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று காலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

 இது குறித்து தகவல் அறிந்த யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களைச் சமாதானப் படுத்தவும் உண்ணாவிரதத்தைக் கைவிடவும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.