வெளியிடப்பட்ட நேரம்: 16:16 (08/11/2017)

கடைசி தொடர்பு:16:25 (08/11/2017)

நன்னிலத்தில் மீத்தேன் எதிர்ப்புப் போராட்டம் நடத்திய 4 பேர் சிறையில் அடைப்பு!

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் மீத்தேன் திட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நன்னிலம்


கதிராமங்கலம், நெடுவாசலைத் தொடர்ந்து இப்போது `நன்னிலம்' பகுதியில் மீத்தேன் எடுக்க கடந்த 31.10.2017 அன்று ஓ.என்.ஜி.சி  நிறுவனம் பணி தொடங்க திட்டமிட்டது. அதை ஊர் பொதுமக்கள் தடுத்து நிறுத்தி விளக்கம் கேட்டபோது ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் ஊர் மக்கள் சம்மதம் இல்லாமல் பணி தொடங்கப்பட மாட்டாது என அறிவித்தனர். இந்நிலையில் இன்று 8.11.2017 அதிகாலை நன்னிலம் இளைஞர்கள் அன்புச்செல்வன், ரவி, ஜானகிராமன், திலக் ஆகிய நால்வரை நன்னிலம் காவல்துறை காரணம் ஏதும் கூறாமல் அழைத்துச் சென்றிருக்கிறது. அவர்கள் எரவாஞ்சேரி காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

பின்னர் நால்வரும் நன்னிலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றம் அவர்களை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து நால்வரும் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். மீத்தேன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடியதற்காக அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.