”பணமதிப்பு நீக்கத்தால் மோடி சொன்னதில் ஒன்றாவது நிறைவேறியதா?” - ஸ்டாலின் | Did modi achieve his goals with demonetisation? questions stalin

வெளியிடப்பட்ட நேரம்: 19:31 (08/11/2017)

கடைசி தொடர்பு:19:31 (08/11/2017)

”பணமதிப்பு நீக்கத்தால் மோடி சொன்னதில் ஒன்றாவது நிறைவேறியதா?” - ஸ்டாலின்

பண மதிப்பிழப்பு நடவடிக்கை அமலுக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு இன்றைய தினத்தை கறுப்பு தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கின்றன எதிர்க்கட்சிகள். தி.மு.க., ஒருமித்தக் கருத்துடைய கட்சிகளோடு இணைந்து தமிழகம் முழுக்க மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. மழை பாதிப்பு காரணமாக குறிப்பிட்ட எட்டு மாவட்டங்களில் மட்டும் இந்தப் போராட்டத்தைத் தவிர்த்துவிட்டது. மதுரை அண்ணா நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். நேற்று இரவு வரை ஆர்ப்பாட்டத்துக்கான அனுமதி கிடைக்காமலிருந்தது. பின்னர் திடீரென நேற்று இரவு ஆர்ப்பாட்டத்துக்கான அனுமதியை அளித்தது காவல்துறை. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள நேற்று மாலையே மதுரை வந்து விட்டார் மு.க.ஸ்டாலின்!

 

கருப்பு தினம் இன்று

கறுப்பு தினம் இன்று

இன்று காலை கறுப்புச் சட்டை அணிந்து கட்சித் தொண்டர்களும், கூட்டணிக் கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில், திரளாகக் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ''125 கோடி மக்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்திய இந்த நாள் கறுப்பு நாள்! நள்ளிரவில் சுதந்திரத்தைப் பெற்ற நாம், தற்போது நள்ளிரவில் சுதந்திரத்தை இழந்து நிற்கிறோம். ஒட்டுமொத்தப் பணப் புழக்கத்தையும் முடக்கிய ஆட்சி மோடி தலைமையிலான ஆட்சி. எந்தத் திட்டமிடலும் இல்லாமல், திடீரென்று பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார்கள். மக்களைப் பாதிக்க வைத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  அடிப்படைத் தேவைகளுக்குக் கூட வங்கி ஏ.டி.எம் வாசலில் மக்கள் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சிகிச்சைக்குத் தேவையான பணத்தைக்கூட எடுக்க முடியாமல், நோயாளிகள் அவதிப்பட்டனர். ஏ.டி.எம் கியூவில் மக்கள் மயங்கி விழுந்தார்கள். இதற்கெல்லாம் மோடி பதில் சொல்ல வேண்டும். இதை முன்கூட்டியே திட்டமிட்டு அறிவித்திருக்க வேண்டும். இதை பி.ஜே.பி-யைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சின்ஹா எதிர்த்தார். சுப்பிரமணியன் சுவாமி எதிர்த்தார். நாங்கள் தொடர்ந்து இதை எதிர்த்து வருகிறோம். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், தி.மு.க-வுக்கோ, தனிப்பட்ட  எங்களுக்கோ பாதிப்பா என்றால், இல்லை; பொதுமக்கள் பாதிக்கப்பட்டதால் எதிர்க்கிறோம்.

 

 

கருப்பு தினம் இன்று

வெங்கைய நாயுடுவுடன் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில், இந்த அறிவிப்புக்கு எதிராக நான் பேசினேன். நெருக்கடி நிலை உருவானபோது, அப்போது தமிழகத்தில் ஆட்சியைப் பற்றிக் கவலைப்படாமல், அதை எதிர்த்த ஒரே ஆளும் கட்சி தி.மு.க. தமிழகத்துக்கு எந்த வகையில் ஆபத்து வந்தாலும் அதை தி.மு.க எதிர்க்கும். குலாம் நபி ஆசாத் நடத்திய எதிர்க்கட்சிகள் கூட்டத்தில், கனிமொழியும் கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில்தான் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. அதன் பின்பு தி.மு.க-வுடன் ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்துவதாக அறிவித்தோம்.

இதற்கிடையில் நேற்று ஆங்கில ஊடகத்தில், 'தி.மு.க போராட்டத்தை நிறுத்திவிட்டது; மோடியுடன் சமரசமாகி விட்டார்கள்' என்று கற்பனையாக எழுதினார்கள். மழையால் பாதிக்கப்பட்ட எட்டு மாவட்டங்களில் மட்டும் கட்சியினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டுமென்பதற்காக, போராட்டத்தை நிறுத்தினோம். இதற்குமுன் அறிவித்த ரேஷன்கடை போராட்டத்தையும் மழையால் நிறுத்தினோம். அப்போது, 'மோடி வருகிறார்... போராட்டத்தை  மாலையில் நடத்துங்கள்' எனக் காவல்துறையினர் சொன்னார்கள். காலையில்தான் ரேஷன்கடை திறக்கும் என்பதால், 'காலையில்தான் போராட்டம் நடத்துவோம்' என்று உறுதியாக இருந்தவர்கள் நாங்கள். ஆனால், மழை பெய்ததால், போராட்டத்தைத் தள்ளிவைத்தோம்.

"மக்களைப் பாதிக்கும் திட்டங்களை எதிர்ப்போம்"

தனிப்பட்ட ஒரு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி சென்னை வந்தார். திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான கருணாநிதியைப் பார்க்க பிரதமர் விரும்புவதாக ஷார்ஜாவில் இருந்த என்னிடம் தெரிவிக்கப்பட்டது. 'பிரதமர் நவம்பர் 6-ம் தேதி வருகிறார்; நீங்கள் வரவேண்டும்' என்று சொன்னார்கள். நாட்டின் பிரதமருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் நான் சென்னை வந்தேன். சிலர் இதை அரசியாலாக்கத் திட்டமிடுகிறார்கள். அது நடக்காது. பண மதிப்பிழப்பின் பாதிப்பை ஊடகங்கள் தொடர்ந்து எழுதி வருகின்றன. உதாரணத்துக்கு, திருப்பூரில் தொழிலதிபராக இருந்த முருகேசன் என்பவர் பாதிக்கப்பட்டுள்ளார். இன்று அவர் தொழிலாளியாக கஷ்டப்படுகிறார். இதுபோல் பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பால் வியாபாரி முதல் காய்கறி வியாபாரி வரை பாதிக்கப்பட்டுள்ளார்கள். பண மதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 'திட்டமிட்ட கொள்ளை' என்று சொல்கிறார். ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், 'நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவிகிதம்கூட வளரவில்லை' என்கிறார். பொருளாதார மேதை அமர்த்தியா சென், 'பண மதிப்பு நீக்கம் சர்வாதிகார நடவடிக்கை' என்று கூறியுள்ளார்.

மூன்று நோக்கங்களுக்காக பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்படுவதாக பிரதமர் மோடி சொன்னார். கள்ளநோட்டு, கறுப்புப் பணம், தீவிரவாதிகளுக்குப் பணப் பரிமாற்றம் ஆகியவற்றை ஒழிப்பதற்காக அந்த நடவடிக்கை கொண்டுவரப்பட்டதாகச் சொன்னார். ஆனால், அவற்றில் ஏதாவது ஒன்றாவது ஒழிக்கப்பட்டுள்ளதா என்பதை மோடிதான் சொல்லவேண்டும். அடுத்து ஜி.எஸ்.டி-யால் வணிகர்களும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை நடைமுறைப்படுத்துவதற்கு முன் அவகாசம் வேண்டும் என்று நான் கேட்டேன். ஆனால், மத்திய அரசு அதைக் கேட்கவில்லை. மத்திய அரசின் வருவாய்த்துறை செயலாளர், 'ஜி.எஸ்.டி-யை மாற்றியமைக்க வேண்டும்' என்று இப்போது கூறியுள்ளார். தற்போது குஜராத் சட்டசபைத் தேர்தலுக்காக, ஜி.எஸ்.டி-யில் மாற்றம் கொண்டுவரப்படும் என மோடி கூறியுள்ளார். மக்களைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும், எதற்கும் அஞ்சாமல் திமுக தொடர்ந்து எதிர்க்கும்'' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close