யுனெஸ்கோவின் கிரியேட்டிவ் நகரங்கள் பட்டியலில் சென்னை! பிரதமர் மோடி வாழ்த்து

பாரம்பர்ய இசை பங்களிப்புக்காக யுனெஸ்கோவின் கிரியேட்டிவ் நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றதற்காகச் சென்னை மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


ஐக்கிய நாடுகள் அமைப்பின் அங்கமான யுனெஸ்கோ அமைப்பு கைவினைப் பொருள்கள் மற்றும் நாட்டுப்புறக் கலை, நகர வடிவமைப்பு, திரைப்படம், கேஸ்ட்ரானமி (உணவைத் தேர்ந்தெடுத்தல், சமைத்தல் மற்றும் உண்ணுதல்), இலக்கியம், ஊடகக் கலை மற்றும் இசை என
7 பிரிவுகளில் சிறப்பான பங்களிப்பு செய்யும் நகரங்களை கிரியேட்டிவ் சிட்டீஸ் (Creative Cities) என்ற அடைமொழியுடன் அங்கீகாரம் அளிக்கும். கடந்த 2004-ம் ஆண்டு முதல் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நகரங்களை இந்தப் பட்டியலில் இணைத்து யுனெஸ்கோ அமைப்பு ஊக்கப்படுத்தி வருகிறது. 

அதன்படி, பாரம்பர்ய இசைக்கு சென்னை அளித்து வரும் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் கிரியேட்டிவ் சிட்டீஸ் பட்டியலில் சென்னையையும் யுனெஸ்கோ அமைப்பு சேர்த்தது. இந்தாண்டில் சென்னையுடன் சேர்த்து நகர வடிவமைப்புக்காகத் துபாய், இலக்கியத்துக்காகத் தென்னாப்பிரிக்காவின் டர்பன் உள்ளிட்ட 64 நகரங்கள் யுனெஸ்கோவின் கிரியேட்டிவ் சிட்டீஸ் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளன. இந்தப் புதிய நகரங்களுடன் சேர்த்து உலகம் முழுவதும் உள்ள 72 நாடுகளைச் சேர்ந்த 180 நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. கைவினைப் பொருள்கள் மற்றும் நாட்டுப்புறக் கலை பிரிவில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், பாரம்பர்ய இசைக்காக வாரணாசி உள்ளிட்ட இந்திய நகரங்கள் கிரியேட்டிவ் சிட்டீஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 

யுனெஸ்கோ அமைப்பின் கிரியேட்டிவ் சிட்டீஸ் பட்டியலில் பாரம்பரிய இசைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதற்காகவே பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘பாரம்பரிய இசைப் பங்களிப்புக்காக யுனெஸ்கோ அமைப்பின் பட்டியலில் இடம்பெற்றதற்காகச் சென்னை மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துக்கொள்கிறேன். பாரம்பரிய இசைக்கு சென்னை அளித்துள்ள பங்களிப்பு விலைமதிப்பற்றது. இது நமது நாடே பெருமைகொள்ளும் தருணம்’ என்று கூறியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!