வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (08/11/2017)

கடைசி தொடர்பு:18:00 (08/11/2017)

இவன்கா ட்ரம்ப் வருகையையொட்டி ஹைதராபாத்தில் பிச்சை எடுக்கத் தடை!

இவன்கா

மெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகள் இவன்கா ட்ரம்ப் வருகையையொட்டி, ஹைதராபாத்தில் பிச்சை எடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிள்ளது. இது தொடர்பான அறிக்கையை, ஹைதராபாத் காவல்துறை ஆணையர் மஹேந்தர் ரெட்டி வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையின்படி, “சில முக்கிய சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறு கொடுக்கும் வகையில், பிச்சை எடுப்பவர்கள் நடத்துகொள்கிறார்கள் என்று எங்கள் கவனத்துக்கு வந்தது. மேலும், இந்தத் தொழிலில் ஊனமுற்றவர்களும்  குழந்தைகளும் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனால், செவ்வாய்க்கிழமை (7.11.2017) 6 மணி முதல் 2018 ஜனவரி 7-ம் தேதி காலை 6 மணிவரை, ஹைதராபாத்தில் பிச்சை எடுக்கத் தடை விதித்துள்ளோம். மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படாமல் இருக்கவே இந்தத் தடை அறிவித்தற்கு காரணம் என்று கூறப்பட்டாலும், இவன்கா டிரம்பின் வருகையையொட்டி இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்தத் தடை, அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தொடரும்.  

ஹைதராபாத்தில் நடக்கவுள்ள சர்வதேசத் தொழில்முனைவோர் மாநாட்டில், இவன்கா ட்ரம்ப் கலந்துகொள்ளவிருக்கிறார். ஆனால், ஹைதராபாத்தில் இப்படி நடப்பது இது முதல்முறையல்ல. ஏற்கெனவே, கடந்த 2000-ம் ஆண்டு, ஹிலாரி கிளின்டன் வந்தபோது, பிச்சை எடுப்பது தடைசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க