வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (08/11/2017)

கடைசி தொடர்பு:18:15 (08/11/2017)

நடுவழியில் ஜப்தி செய்யப்பட்ட அரசுப் பேருந்து! - சிரமத்தில் சிக்கிய பயணிகள்

ஜப்தி செய்யப்பட்ட பேருந்து

நெல்லையிலிருந்து மதுரைக்குப் புறப்பட்டுச் சென்ற அரசுப் பேருந்து நீதிமன்ற உத்தரவுப்படி நடுவழியில் ஜப்தி செய்யப்பட்டது. அதனால் அந்தப் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள்.

நெல்லையில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் பேருந்து ஒன்று 3 மணியளவில் புறப்பட்டுச் சென்றது. அந்தப் பேருந்தில் 50 பயணிகள் இருந்தனர். கோவில்பட்டி பேருந்து நிலையத்தின் வெளியே நிறுத்தப்பட்டு ஆட்களை ஏற்றிக்கொண்டிருந்தபோது கோர்ட் ஆமினா வந்தார். அவர் அந்தப் பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம், ‘இந்தப் பேருந்து ஒரு விபத்தில் சிக்கிய பயணிக்கு இழப்பீட்டுத் தொகையை கொடுக்கவில்லை. அதனால் நீதிமன்ற உத்தரவுப்படி இந்தப் பேருந்தை ஜப்தி செய்கிறோம்’ என்று தெரிவித்தார்.

அத்துடன், நீதிமன்றம் கொடுத்த ஆணையின் நகலையும் காண்பித்தார். பின்னர், ஜப்தி செய்வதற்கான நீதிமன்ற உத்தரவை பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியில் ஒட்டிய நீதிமன்ற பணியாளர், அந்தப் பேருந்தை ஜப்தி செய்வதாக அறிவித்தார். இதனால் அந்தப் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அங்கேயே இறக்கிவிடப்பட்டனர். அந்த வழியாக வரக்கூடிய வேறு பேருந்துகளில் அந்தப் பயணிகள் ஏறிச் சென்றனர். 

பேருந்து ஜப்தி

நடுவழியில் பேருந்திலிருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டதால், பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். குறிப்பாகப் பெண்களும் குழந்தைகளும் மிகுந்த சிரமத்தைச் சந்தித்தனர். மழை பெய்ததால் கூடுதல் சிரமம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர். பயணிகள் பேருந்தில் ஏறுவதற்கு முன்பு அல்லது, குறிப்பிட்ட இடத்தை அடைந்து அனைத்துப் பயணிகளும் இறங்கிய பின்னர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவது சரியானதாக இருக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்தனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க