ஏழு நாள்களுக்குள் வீடுகளைக் காலி செய்யச் சொன்னா... நாங்க எங்கே போவோம்?’: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் | 'You have to evacuate houses within seven days': salem tahsildar sends notice to Periyeri people

வெளியிடப்பட்ட நேரம்: 20:01 (08/11/2017)

கடைசி தொடர்பு:20:22 (08/11/2017)

ஏழு நாள்களுக்குள் வீடுகளைக் காலி செய்யச் சொன்னா... நாங்க எங்கே போவோம்?’: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

சேலம் மூன்று ரோடு பெரிய ஏரிக்கரை பகுதியில் கடந்த 70 ஆண்டுகளாக  வசித்துவரும் மக்களை, அந்த இடத்திலிருந்து ஒரு வாரத்தில் காலி செய்ய வேண்டும் என்று வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. 

சேலம் மூன்றுரோடு பெரிய ஏரிக்கரைப் பகுதியில் கடந்த 70 வருடங்களுக்கு மேல் 100-க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகிறோம். தற்போது திடீரென 7 நாள்களுக்குள் எங்கள் வீடுகளைக் காலி செய்துவிட்டுப் போக வேண்டும் என்று சேலம் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். படித்துக்கொண்டிருக்கும் எங்க குழந்தை குட்டிகளைக் கூட்டுக்கொண்டு நாங்கள் எங்கே போக முடியும். இதைத் தடுத்து நிறுத்தி நாங்கள் அப்பகுதியில் நிரந்தரமாக வாழ்வதற்கு எங்களுக்குப் பட்டா வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அப்பகுதியில் வசித்துவரும் 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டார்கள்.

இதுபற்றி அந்தக் கிராமவாசி ஜெகன் கூறுகையில், 'நாங்க சேலம் மூன்று ரோடு பகுதியில் ஜவஹர் மில் பின்புறம் பெரியேரி கரை பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்டக் குடும்பத்தினர் கடந்த 70 வருடங்களுக்கு மேல் குடியிருந்து வருகிறோம். எங்க வீட்டு முகவரியில் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, மின் இணைப்பு இருப்பதோடு, வருடந்தோறும் வீட்டுவரியும் கட்டி வருகிறோம்.
நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கும் நீர் நிலைக்கும் எந்தவித இடையூறும் கிடையாது. இதுநாள் வரை எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதில்லை. நாங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் ஏழைகள். எங்களுக்கு இந்த இடத்தைவிட்டால் வேறு இடம் கிடையாது. தற்போது சேலம் மேற்கு வட்டாட்சியரிடம் இருந்து எங்களுக்கு ஒரு நோட்டீஸ் வந்துள்ளது.

ஜெகன் 

அந்த நோட்டீஸில் எங்கள் வீடுகளை 7 தினங்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. திடீரென எங்கள் குழந்தை குட்டிகளைக் கூட்டிக்கொண்டு எங்கே போக முடியும். இதற்கு எங்களை அரசாங்கம் கொன்றுவிடலாம். எங்கள் பகுதியிலேயே இரண்டு, மூன்றடுக்கு மாடி வீடுகள் கட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நோட்டீஸ் அனுப்பவில்லை. குடிசை மற்றும் ஓட்டு வீடுகளை மட்டும் காலி செய்யச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள்.

ஏரிக்குச் சொந்தமான 18.19 ஏக்கர் இடத்தை 17.97 ஏக்கர் என்று திருத்தம் செய்து பலருக்கும் பட்டா கொடுத்திருக்கிறார்கள். தற்போது எங்களைக் காலி செய்துவிட்டு அந்த இடத்தை வேறு நபர்களுக்கு கொடுக்க முயற்சி செய்கிறார்கள். கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேல் இந்த இடத்தில் குடியிருக்கும் எங்களுக்கு பட்டா கொடுத்து உதவ வேண்டும்' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க