'வீடு கட்டிக்கொடுங்கள்; நிவாரணம் வழங்குங்கள்'- அதிகாரிகளுக்கு 8 கட்டளைகளைப் பிறப்பித்த அரசு கொறடா!

மழையால் வீடு இழந்தவர்களுக்கு மத்திய மாநில அரசின் வீடு வழங்கும் திட்டத்தில் உடனே வீடு வழங்க வேண்டும் என வடகிழக்குப் பருவமழை குறித்த ஆய்வுக்கூட்டத்தில் அரசுத் தலைமைக் கொறடா ராஜேந்திரன், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை மற்றும் டெங்கு நோய் முன்னெச்சரிக்கை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் லெட்சுமிபிரியா, சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி ஆகியோர் கலந்துகொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர். அப்போது அரியலூர் மாவட்டத்தில் பருவமழையால் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரத்துவாய்க்கால்கள் சீரமைத்து மணல் மூட்டைகளை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள பள்ளிகளைச் சிரமைக்க வேண்டும். இடிந்துவிழும் தருவாயில் உள்ள பழைய கட்டடங்களை இடித்துவிட வேண்டும். பருவமழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு வழங்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணப் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், டெங்கு நோய் முன்னெச்சரிக்கையிலும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும். கிராமங்களைச் சுகாதாரமாகவும், தூய்மையாகவும் வைத்துக்கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தவிர்க்கும் வகையில், தூய்மை இந்தியா திட்டத்தில், தனிநபர் இல்ல கழிவறை கட்ட பொதுமக்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில், அந்தந்த ஊராட்சியில் வழங்கப்பட்டு தண்ணீரை பரிசோதனை செய்து பயன்படுத்திக்கொள்ளும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் சோதனை கருவிகளை தலைமை கொறடா ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் லெட்சுமிபிரியா வழங்கினர்.இதில், அனைத்துத் துறை அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!