வெளியிடப்பட்ட நேரம்: 23:36 (08/11/2017)

கடைசி தொடர்பு:18:16 (09/07/2018)

காவல்துறை செயல்பாடுகளை விளக்கும் சிறப்பு முகாம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் பொருட்டு, ‘Policing at your door steps’ என்ற தலைப்பில் விழிப்பு உணர்வு பிரசார முகாமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தொடங்கிவைத்தார். ஒரு வார காலத்துக்கு இதேபோன்ற முகாம்கள் நடத்தப்படும் என்று அவர் கூறினார். 

இதன்படி பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குச் சாலைப்பாதுகாப்பு பற்றிய விழிப்பு உணர்வு, போதைப் பொருள்கள் மற்றும் புகையிலைப் (Drug & Tobacco) பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், கந்துவட்டி மற்றும் இதுதொடர்பாக பொதுமக்களுக்கு இருக்கும் சட்டப்பாதுகாப்பு, பாலியல் ரீதியான கொடுமைகள், கைது செய்யும்பொழுது குடிமக்களுக்கு இருக்கும் உரிமைகள் ஆகியவைகுறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படவிருக்கின்றன. அந்தவகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களை காவல் நிலையங்களைப் பார்வையிடச் செய்து, காவல் நிலையங்களின் செயல்பாடுகள், பதிவேடுகள் மற்றும் ஆயுதங்கள் போன்றவைகுறித்து அறியச் செய்யும் வகையில் நிகழ்வுகள் நடத்தப்படவிருக்கின்றன. காவல்துறை பற்றிய விழிப்பு உணர்வு முகாம்கள் மாவட்டத்தில் உள்ள உட்கோட்ட காவல்நிலையங்களில் இன்று நடந்தது.

 

காவல் துறை செயல்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம்

ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற இந்த முகாம் ராமநாதபுரம் பி-1 காவல் நிலையத்தில் நடந்தது. டி.எஸ்.பி நடராஜன், காவல் ஆய்வாளர் சிவசக்தி ஆகியோர் காவல்துறை மற்றும் காவல் நிலையங்களின் செயல்பாடுகுறித்து விளக்கினர். இதேபோல்  பரமக்குடி, கீழக்கரை, பெருநாழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் இந்த முகாம் நடைபெற்றது.

பொதுமக்களுக்கு காவல் நிலைய செயல்பாடு குறித்த முகாம்


கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில், வருகிற 10-ம் தேதி காலை 11 மணி முதல் 2 மணி வரை  மாவட்டக் காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் இம்முகாமில் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம் என எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா அறிவித்துள்ளார்.