’அம்மா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை’ - ஜெயலலிதா சமாதியில் மனுகொடுக்க முயன்ற அ.தி.மு.க தொண்டர்!

தேனி ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் கோ.திருப்பதி. இவர் அ.தி.மு.க கட்சியின் ஒன்றிய இலக்கிய அணிச் செயலாளராக இருந்துவருகிறார். கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றவில்லை. ஆனால், நாளை (9.11.2017) தேனியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறார்கள் என்று கூறி ஜெயலலிதா சமாதியில் மனு கொடுக்க முயன்றார்.

காரணம் என்னவென்று விசாரித்தபோது `நான் ஒருமுறை கடனில் சிக்கித் தவித்தபோது தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டேன். பின்னர், என் குடும்ப கஷ்டத்தைச் சொல்லி ஜெயலலிதாவுக்கு மனு எழுதினேன். அதனால் ஜெயலலிதா எனக்கு ஒரு லட்ச ரூபாய் செக் அனுப்பி வைத்தார்கள். அதன்பின்னர் என் மகனுக்கு ஜெயா டி.வி-யில் கேமராமேன் வேலை வேண்டும் என்பதற்காக ஜெயலலிதாவை சந்திக்கச் சென்றிருந்தேன். ஆனால், சில நாள்கள் கழித்து ஜெயலலிதாவே என்னை நேரில் அழைத்து உன் மகன் என்ன படித்திருக்கிறான் என்று கேட்டார்கள். அதற்கு நான் 12-வது படித்திருக்கிறான் என்று சொல்ல, கேமராமேன் வேலைக்கு 12-ம் வகுப்பு போதாது. அதற்கு விஷுவல் கம்யூனிகேஷன் படிக்க வேண்டும் என்று சொன்னார். அதுமட்டுமல்லாமல் என் மகனைக் கல்லூரியிலும் சேர்த்து படிக்கவைத்தார். ஆனால், உடல்நிலை சரியில்லாமல் ஜெயலலிதா இறந்துவிட்டார்.

அதன்பின், என் வீட்டில் கஷ்டத்தால் என் மகனின் படிப்பு பாதியில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதற்குப் பண உதவிக்காக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தையும் சந்தித்து விவரத்தைக் கூறினேன். ஆனால், அவர்கள் உதவி செய்யவில்லை. பின்னர், ஏதோ ஒரு வகையில் ஜெயலலிதாவால் எனக்கு உதவி கிடைத்தது, ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கூறினார். ஆனால், இன்று அவர் இல்லை. தற்போது முதல்வரும் துணை முதல்வரும் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால், நாளை தேனியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறார்கள்’ என்றார். பின்னர், மனுவை ஜெயலலிதாவின் சமாதியில் வைப்பதற்கு காவல்துறையினர் அனுமதி தரவில்லை. அதனால், போகிறபோக்கில் எம்.ஜி.ஆர் சமாதியில் அந்த மனுவை வைத்து பின்னர், எடுத்துச் சென்றுவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!