வெளியிடப்பட்ட நேரம்: 08:54 (09/11/2017)

கடைசி தொடர்பு:08:54 (09/11/2017)

தமிழகத்தின் 14,098 ஏரிகளில் எத்தனை ஏரிகள் 100% நிரம்பியிருக்கின்றன? #VikatanExclusive

ழை விட்டாலும் தூவானம் விடாதது போல, சென்னையில் மழை விட்ட பின்னரும் பரவிக்கொண்டிருக்கின்றன வாட்ஸ்அப் வதந்திகள். அதில் ஒன்று 'சென்னையின் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன' என்பது. இந்தச் செய்திகளுக்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் விளக்கம் கொடுத்துவிட்டனர். அதாவது, சென்னைக்கு நீர் தரக்கூடிய செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், செங்குன்றம் ஏரிகள், இன்னும் பாதியளவு கூட நிரம்பவில்லை. 35 சதவிகித அளவுக்குத்தான் நிரம்பியிருக்கின்றன. எனவே, அடுத்த ஆண்டின் கோடையில் சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தியாக வேண்டுமெனில், இன்னும் 65 % அளவிற்கு ஏரிகளில் நீர் தேவை. அப்போதுதான் தண்ணீர் பற்றாக்குறை குறித்து கவலைப்படாமல் இருக்கமுடியும்.

சென்னை மெட்ரோவாட்டர் நிறுவனத்தின் இணையதளத்தில் இருக்கும் தகவல்களின்படி, சென்னை ஏரிகளின் நேற்றைய நிலவரம் இது.

சென்னை ஏரிகளின் நிலவரம் 08/11/2017

சென்னை வெள்ளம் வந்தபோது, அதாவது 2015-ம் ஆண்டின் டிசம்பர் 2-ம் தேதிக்கான அளவீடு இது.

சென்னை ஏரிகள் நீர் இருப்பு 2/12/2017

இரண்டையும் ஒப்பிட்டுப்பார்த்தாலே, தற்போது ஏரிகளின் நீர்மட்டம் எந்தளவு குறைவாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

முதல் அட்டவணையின்படி பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் மற்றும் செங்குன்றம் ஏரிகளின் நீர்மட்டம் பாதியளவுகூட இல்லை. மேலும் நீர்வரத்தின் அளவும் முறையே 1172, 850, 590 மற்றும் 1542 மில்லியன் கனஅடி என்றுதான் இருக்கின்றன. எனவே ஏரிகளின் நீர்மட்டம் உடனே உயரவும் வாய்ப்பில்லை. இது சென்னையின் நிலை. சரி... மற்ற ஊர் ஏரிகளின் நிலை என்ன? தமிழகத்தில் மொத்தம் இருக்கும் 14,098 ஏரிகளில் எத்தனை ஏரிகள் முழுமையாக நிரம்பியிருக்கின்றன? ஏரிகளைத் தூர்வாரியதன் மூலமாக 30% நீர் கூடுதலாகச் சேமிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கூறியது உண்மையா? இந்தக் கேள்விகளுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டோம். 

செம்பரம்பாக்கம்

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “மழை வருவதற்கு முன்னரே, பல நீர்நிலைகளில் நீர் வழித்தடங்களைச் சீரமைப்பது, தூர் வாருவது போன்ற பணிகளில் மேற்கொண்டோம். அவை இன்னும் முழுமையாக முடியவில்லை. தொடர்ந்து பணிகள் நடைபெற்றுவருகின்றன. அவை அனைத்தும் முடிய வேண்டும். பின்னரே, தூர்வாரியதின் மூலம் எவ்வளவு தண்ணீர் கூடுதலாகச் சேமிக்கப்பட்டுள்ளது என்பது பற்றிக்கூற முடியும். தமிழகத்தில் இருக்கும் 14,098 ஏரிகளில், 4,858 ஏரிகள் இன்னும் பாதியளவுகூட நிரம்பாமல்தான் இருக்கின்றன. 8/11/2017 அன்றைய நிலவரப்படி இதுவரைக்கும் தமிழகத்தில் 1,379 ஏரிகள் மட்டுமே 100 சதவிகிதம் நிரம்பியிருக்கின்றன. 1,325 ஏரிகளில் நீர்மட்டம் 75 சதவிகிதத்தை விடவும் அதிகமாக இருக்கிறது. 1,831 ஏரிகளில் நீர்மட்டம் 50 முதல் 75 சதவிகிதம் வரையிலான அளவில் இருக்கிறது. 4,705 ஏரிகள், 25 முதல் 50 சதவிகிதம் அளவுக்கே நிரம்பியிருக்கின்றன. 

இனி பெய்யவிருக்கும் மழையைப் பொறுத்துதான் ஏரிகளின் நீர்வரத்து அதிகமாகும். செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் மற்றும் செங்குன்றம் ஆகிய நான்கு இடங்களில் இருந்துதான் சென்னையின் குடிநீர் விநியோகம் நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு தினமும் தேவைப்படும் நீருக்கேற்ப, குடிநீர் வாரியம் பைப்லைன் மூலமாக ஏரிகளிலிருந்து நீரை எடுத்துக்கொள்ளும். நேற்று, செங்குன்றம் ஏரியிலிருந்து 80 மில்லியன் கனஅடி, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 22 மில்லியன் கனஅடி, பூண்டி ஏரியிலிருந்து 15 மில்லியன் கனஅடி நீரானது குடிநீருக்காக எடுக்கப்பட்டுள்ளது. சோழவரம் ஏரியிலிருந்து நீர் எடுக்கப்படவில்லை" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்