வெளியிடப்பட்ட நேரம்: 22:10 (08/11/2017)

கடைசி தொடர்பு:08:05 (09/11/2017)

’தேய்த்தாலும் தேயாது தெற்கு’ - சென்னைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்தது குறித்து கமல் கருத்து

சென்னை மார்கழி இசை விழாக்களுக்குக் கிடைத்த யுனெஸ்கோ அங்கீகாரம் தகுதிக்கும், ரசனைக்கும் கிடைத்தது என்று நடிகர் கமல்ஹாசன் கருத்துத் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அங்கமான யுனெஸ்கோ அமைப்பு கைவினைப் பொருள்கள் மற்றும் நாட்டுப்புறக் கலை, நகர வடிவமைப்பு, திரைப்படம், கேஸ்ட்ரானமி (உணவைத் தேர்ந்தெடுத்தல், சமைத்தல் மற்றும் உண்ணுதல்), இலக்கியம், ஊடகக் கலை மற்றும் இசை என 7 பிரிவுகளில் சிறப்பான பங்களிப்பு செய்யும் நகரங்களை கிரியேட்டிவ் சிட்டீஸ் (Creative Cities) என்ற அடைமொழியுடன் அங்கீகாரம் அளிக்கும். கடந்த 2004-ம் ஆண்டு முதல் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நகரங்களை இந்தப் பட்டியலில் இணைத்து யுனெஸ்கோ அமைப்பு ஊக்கப்படுத்திவருகிறது. அதன்படி, பாரம்பர்ய இசையின் வளர்ச்சிக்காகச் சிறப்பான பங்களிப்பு அளித்ததற்காக அந்தப் பட்டியலில் சென்னையும் சேர்த்து யுனெஸ்கோ அங்கீகாரம் அளித்தது. 

இதற்காக சென்னைவாழ் மக்களுக்குப் பிரதமர் மோடியும் வாழ்த்துத் தெரிவித்திருந்தார். ‘பாரம்பர்ய இசைப் பங்களிப்புக்காக யுனெஸ்கோ அமைப்பின் பட்டியலில் இடம்பெற்றதற்காகச் சென்னை மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துக்கொள்கிறேன். பாரம்பர்ய இசைக்கு சென்னை அளித்துள்ள பங்களிப்பு விலைமதிப்பற்றது. இது நமது நாடே பெருமைகொள்ளும் தருணம்’ என்று கூறியுள்ளார். அதேபோல் சிறந்த படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னையைச் சேர்த்ததற்கு யுனெஸ்கோ அமைப்புக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்திருந்தார்.  

இந்த நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கமல், ‘சென்னை மார்கழி இசை விழாக்களுக்குக் கிடைத்த யுனெஸ்கோ அங்கீகாரம் தகுதிக்கும், ரசனைக்கும் கிடைத்தது. தமிழர் பெருமையைப் பிறர் பாடக் கேட்பதில்தான் சுகமும்,  பெருமையும். இந்தியப் பிரதமர்  சென்னையைப் பாராட்டுதல், தமிழுக்கே பெருமை. தேய்த்தாலும் தேயாது தெற்கு’ என்று கூறியுள்ளார்.