60 பள்ளிகளுக்கு 32 ஆயிரம் விதைகளை அனுப்பிய அரசுப் பள்ளி ஆசிரியர்! #VikatanExclusive | A Government school teacher provided 32 thousand plants seeds for 60 schools

வெளியிடப்பட்ட நேரம்: 09:22 (09/11/2017)

கடைசி தொடர்பு:09:22 (09/11/2017)

60 பள்ளிகளுக்கு 32 ஆயிரம் விதைகளை அனுப்பிய அரசுப் பள்ளி ஆசிரியர்! #VikatanExclusive

 அரசுப் பள்ளி

பெரிய மாற்றம் ஒவ்வொன்றுமே ஏதோ ஓர் இடத்தின் சிறு புள்ளியிலிருந்துதான் தொடங்குகிறது. நாள்தோறும் பசுமையை இழந்துவரும் இந்தச் சூழலில் அதை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருக்கும் உண்டு என்றும் ஆசிரியரான தனக்கு இன்னும் கூடுதல் பொறுப்பு உண்டு என்று வார்த்தைகளால் அல்ல செயலால் என நிரூபித்துவருகிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் ஷங்கர். 

teacherதருமபுரி மாவட்டம், பாலவாடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணிபுரிகிறார் ஷங்கர். மாணவர்களுடன் தோழமையாகப் பழகும் இவர், வறட்சிக்கான தீர்வை நோக்கிப் பயணிக்கிறார். மிக எளிமையாக, தன் பணிகளைக்கூடப் பெருமையாகச் சொல்லிக்கொள்ளக் கூச்சப்படுகிற மனிதராக இருக்கிறார் ஷங்கர். அவரின் தயக்கத்தைக் கரைத்து, பேச வைத்தோம். 

 "நல்ல காற்றைச் சுவாசிக்க, குளு குளுன்னு நிழலில் உட்கார்ந்திருக்க யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால், 2007 -ம் வருஷம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான் ஆசிரியராகப் பணியேற்றுக்கொண்ட பள்ளியில் ஒரு மரத்தைக்கூடப் பார்க்க முடியவில்லை. அங்கே மாணவர்களின் உதவியோடு பல மரங்களை வளர்த்தேன். அந்தப் பழக்கம்தான் நான் மாற்றலாகிப் போனாலும் தொடர்கிறது. இந்தப் பள்ளியில் 2012 வருஷம் பணிக்குச் சேர்ந்தபோது சுமார் 60 மரங்கள் இருந்திருக்கும். மாணவர்கள் உதவியோடு மரங்கள் வளர்க்க ஆரம்பித்தேன். இப்போது 354 மரங்கள் இருக்கின்றன.

school

பள்ளியில் இப்போது 210 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே நர்சரியில் விற்பதுபோன்ற விதைப் பைகள் தந்துள்ளேன். பத்து, இருபது பைகள் என மாணவர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு நான்காயிரத்து இருநூறு பைகளை வாங்கிச் சென்றார்கள். ஒவ்வொரு பையில் மண்ணும் விதையும் இருக்கும். (பெரும்பாலும் வேம்பு, புன்கன், சரக்கொன்றை, நாவல் மர விதைகளே இருக்கும்) அதை அவர்கள் வீட்டில் வளர்க்க வேண்டும். அவர்கள் வளர்க்கும் விதத்தைக் கண்காணிக்க ஒவ்வொரு மாதமும் எங்கள் பள்ளியின் பசுமைப் படை ஒவ்வொரு மாணவரின் வீட்டுக்கும் செல்லும். இதற்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.சிவமூர்த்தி ஆர்வத்துடன் அனுமதியும் ஒத்துழைப்பும் தந்துவருகிறார். 

schoo;

மாணவர்களின் வீட்டுக்குச்சென்று பார்ப்போம். சில பைகளில் இருந்த விதைகள் முளைக்காமல் போயிருந்தால் நாங்கள் எடுத்துச் சென்றிருக்கும் விதைகளைத் தருவோம். சில மாணவர்கள் தாங்களே வீட்டுக்கு அருகே கிடைக்கும் விதைகளைப் புதைத்து வைத்திருப்பர். அதுபோன்ற மாணவர்களைப் பாராட்டுவோம். இப்போது அந்த நாலாயிரம் விதைகளும் சுமார் ஒன்றரை அடி உயரத்துக்கு வளர்ந்துவிட்டன" என்று நெகிழ்ச்சியாகச் சொல்கிறார். 

ஏராளமான விதைகள், பைகளைச் சேகரித்தது எப்படி எனக் கேட்டதற்கு, "பைகள் ஓசூரில் கிடைக்கின்றன. ஒரு கிலோ பை நூறு ரூபாய். ஒரு கிலோவுக்குச் சுமார் 250 பைகள் இருக்கும். ஆனால் விதைகளைச் சேகரிப்பதுதான் கஷ்டமாக இருந்தது. போதுமான விதைகள் எங்கள் பகுதியில் கிடைக்க வில்லை. சரக்கொன்றை மரத்தின் அடியில் மாணவர்களோடு கூடுவோம். அங்குக் கிடக்கும் விதைகளைச் சேகரிப்போம். சரக்கொன்றை விதைகள் மரத்திலிருந்து உதிர்ந்து, எத்தனை மாதங்களாகக் கிடந்தாலும் முளைக்காது. அந்த விதைகளை மூன்று நாள்களுக்கு நீரில் ஊற வைத்து, பின் மண்ணில் புதைக்க வேண்டும். அப்படியெல்லாம் விதைகளைச் சேர்த்தோம். பின்பு, நண்பர் ஒருவரின் மூலம் பெங்களூரில் இருக்கும் விதைப் பண்ணைப் பற்றித் தெரியவந்தது. இப்போது அங்கிருந்துதான் விதைகளை வாங்குகிறோம். ஒரு கிலோ விதை நூற்றிஐம்பது ரூபாய்.

எங்களின் இந்த முயற்சிக்கு 'வனம் வளர்க்கும் வித்துகள்' எனப் பெயரிட்டோம். இந்தத் திட்டத்தை எங்கள் பள்ளியோடு முடித்துகொள்ளக்கூடாது என, தருமபுரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஆறாயிரம் பைகளைத் தந்தோம். அதை இன்னும் பரவலாகக் கொண்டுசெல்ல வேண்டும் என நினைத்தேன். நண்பர்கள் பணிபுரியும் பள்ளிகளுக்கு அனுப்பினேன். ஃபேஸ் புக்கில் இருக்கும் ஆசிரியர்களிடம் கேட்டபோது பலரும் ஆர்வமாகத் தங்கள் பள்ளிக்கு விதைகளைக் கேட்டனர். இப்போது 60 பள்ளிகளுக்கு 32 ஆயிரம் விதைகளை அனுப்பி வைத்துள்ளேன்" என மலைக்க வைக்கிறார் ஷங்கர்.

school

ஆசிரியர் ஷங்கரின் ஃபேஸ் புக்கில் சென்று பார்த்தால், அவர் விதை அனுப்பிய பள்ளி ஆசிரியர்கள் அவற்றைத் தங்கள் பள்ளியில் வளர்க்கும் படங்களைப் பகிர்ந்து நன்றி கூறிவருகின்றனர். அந்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் சான்றிதழ்களும் மெடல்களையும் அனுப்பிவைக்கிறார் ஷங்கர். இதற்கு நிறையச் செலவுகள் ஆகிருக்குமே எனக் கேட்டதற்கு, "எல்லாமும் சேர்த்துப் பத்தாயிரம் ரூபாய் ஆகியிருக்கும். நண்பர் ஒருவர் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தார். மீதம் நானே பார்த்துக்கொண்டேன். பணத்தை விட, இந்தத் திட்டத்தைக் கொண்டுசேர்ப்பதுதான் என் நோக்கமாக இருக்கிறது. இப்போது எங்கள் பள்ளி மாணவர்களின் வளர்த்துவரும் நாலாயிரம் மரக்கன்றுகளை, இந்த ஆண்டு குழந்தைகள் தினத்தில் பல பள்ளிகளுக்கு அனுப்ப விருக்கிறோம். எங்களால் முடிந்தளவுக்குப் பசுமையைப் பரப்பும் பணியைச் செய்கிறோம். வறட்சியை ஒழிக்க நம்மால் இயன்றளவு உதவுவோம்.

schoo;

பள்ளியின் தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் தந்துவரும் ஒத்துழைப்பினால்தான் இவற்றையெல்லாம் சிறப்பாகச் செய்ய முடிகிறது. இந்த நேரத்தில் தமிழகக் கல்வித்துறை அமைச்சர் அற்புதமான ஒரு விஷயத்தை அறிவித்துள்ளார். மரம் வளர்க்கும் மாணவருக்கு ஐந்து மதிப்பெண்கள் என்பதுதான் அது. அப்படியெனில் எங்கள் பள்ளியின் அனைத்து மாணவர்களும் அந்த மதிப்பெண்களை எளிதாகப் பெற்றுவிடுவர்." என்று நிறைவாக முடிக்கிறார் ஆசிரியர் ஷங்கர்.

'வனம் வளர்க்கும் வித்துகள்' திட்டம் மட்டும் இல்லாமல், யோகா, அறிவியல் போட்டிகளில் மாணவர்களை ஆர்வத்துடன் ஈடுபடச் செய்கிறார். மாணவர்களை ஆரோக்கியமாக வழிநடத்தும் ஷங்கர் போன்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணிகளைப் பாராட்டுவோம்.


டிரெண்டிங் @ விகடன்