வெளியிடப்பட்ட நேரம்: 00:32 (09/11/2017)

கடைசி தொடர்பு:07:58 (09/11/2017)

சென்னைக்கு கிரியேட்டிவ் சிட்டி விருது..! மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி

சென்னை மாநகரத்துக்கு பாரம்பர்ய இசைக்கான படைப்பு நகரம் என்ற பெருமையை யுனெஸ்கோ அமைப்பு வழங்கியிருப்பது மகிழ்ச்சி தருகிறது என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 


ஐக்கிய நாடுகள் அமைப்பின் அங்கமான யுனெஸ்கோ அமைப்பு கைவினைப் பொருள்கள் மற்றும் நாட்டுப்புறக் கலை, நகர வடிவமைப்பு, திரைப்படம், கேஸ்ட்ரானமி (உணவைத் தேர்ந்தெடுத்தல், சமைத்தல் மற்றும் உண்ணுதல்), இலக்கியம், ஊடகக் கலை மற்றும் இசை என 7 பிரிவுகளில் சிறப்பான பங்களிப்பு செய்யும் நகரங்களை கிரியேட்டிவ் சிட்டீஸ் (Creative Cities) என்ற அடைமொழியுடன் அங்கீகாரம் அளிக்கும். கடந்த 2004-ம் ஆண்டு முதல் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நகரங்களை இந்தப் பட்டியலில் இணைத்து யுனெஸ்கோ அமைப்பு ஊக்கப்படுத்தி வருகிறது.

 

அதன்படி, பாரம்பர்ய இசைக்கு சென்னை அளித்துவரும் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் கிரியேட்டிவ் சிட்டீஸ் பட்டியலில் சென்னையையும் யுனெஸ்கோ அமைப்பு சேர்த்தது. இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், 'மண்டப அரங்குகளில் இசைக்கும் கர்நாடக சங்கீதம் முதல் மண்ணின் மனிதர்களிடம் ஒலிக்கும் கானா பாடல்கள் வரை முத்தமிழின் ஓர் அங்கமான இசைத்தமிழின் பல வடிவங்களை மேடைகளிலும் திரைப்படங்களிலும் வளர்க்கும் சென்னை மாநகரத்துக்கு பாரம்பர்ய இசைக்கான படைப்பு நகரம் என்ற பெருமையை யுனெஸ்கோ அமைப்பு வழங்கியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. நன்றியையும் மகிழ்ச்சியையும் இதயத்தால் இசைப்போம்' என்று பதிவிட்டுள்ளார்.