வெளியிடப்பட்ட நேரம்: 09:46 (09/11/2017)

கடைசி தொடர்பு:10:12 (09/11/2017)

25 ஆண்டுகளுக்குப் பிறகு போயஸ் கார்டனில் சோதனை!

ஜெயலலிதா வாழ்ந்த வீடான போயஸ் தோட்டத்தில், இன்று அதிகாலையிலிருந்து வருமான வரித்துறை சோதனை நடத்திவருகிறது. 

Poes garden

ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது வாழ்ந்த வீடான சென்னை போயஸ் தோட்டத்தில், இன்று காலை 6 மணியிலிருந்து வருமான வரித்துறை சோதனை நடந்துவருகிறது. இதற்கு முன்னர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது மட்டுமே போயஸ் தோட்டத்தில் சோதனை நடந்துள்ளது. இதையடுத்து, கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் சோதனை நடக்கிறது. 

இன்று அதிகாலை 6 மணி அளவில் போயஸ் தோட்டத்தில் நுழைந்த 10 வருமான வரித்துறை அதிகாரிகள், தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக, போயஸ் கார்டனில் செயல்பட்டுவந்த பழைய ஜெயா டி.வி அலுவலகத்திலும் தொடர் சோதனை நடந்துவருகிறது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், போயஸ் தோட்டம் சசிகலாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அவரது உடமைகள் பலவும் அங்கேதான் உள்ளன. சில நாள்களுக்கு முன்னர் சென்னை உயர் நீதிமன்றம், போயஸ் தோட்டத்தில் போடப்பட்டிருந்த அதிக போலீஸ் பாதுகாப்புகுறித்து, `எதற்காக போயஸ் கார்டனில் அதிகமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதை உடனே விலக்கிக்கொள்ள வேண்டும்' என்று கூறியது. 

இந்நிலையில், சசிகலா உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்குச் சொந்தமான 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று வருமான வரித்துறை சோதனை நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.