’சதி நடக்கிறது!’ - அஞ்சமாட்டேன் என டி.டி.வி.தினகரன் ஆவேசம்

சசிகலா, திவாகரன், தினகரன், பாஸ்கரன் ஆகியோரின் வீடு, ஜெயா டிவி அலுவலகம் உள்ளிட்ட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை முதலே வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், "என் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடக்கவில்லை. யாரோ ஒரு அதிகாரி வந்தார். சிறிது நேரத்தில் சென்றுவிட்டார். என் வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்த போலீஸிடம் இங்கு ஏன் நிற்கிறீர்கள் என்று கேட்டேன். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. எனது வீட்டுக்கு வந்த அதிகாரி யார் என்று எனக்குத் தெரியாது. ஜெயா டிவி அலுவலகத்தில் சோதனை நடைபெற்றுவருகிறது.  

dinakaran
 

புதுச்சேரி ஆரோவில் பகுதியைத் தாண்டி, எனக்குச் சொந்தமான பண்ணை வீடு ஒன்று உள்ளது. அங்கு பணிபுரிபவர்கள், மாடுகளைப் பார்த்துக்கொள்கிறார்கள். அவர்கள் படிப்பறிவில்லாதவர்கள். அங்கு சோதனை நடைபெற்றுவருகிறது. அங்கு எதையாவது வைத்து எடுத்து விடக்கூடாது. எனவே, அங்கு எனது வழக்கறிஞர்களை அனுப்பி உள்ளேன். யார் ஏவி இவர்கள் சோதனை நடத்திவருகிறார்கள் என்று தெரியவில்லை. எதையும் சந்திக்கத் தயார். இப்போதுதான் பூனைக்குட்டி வெளியே வந்திருக்கிறது. சசிகலாவையும் என்னையும் ஒடுக்க சதி நடக்கிறது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் இப்படித்தான் சோதனைகள் நடந்தன. இதையெல்லாம் நான் 30 வருடங்களாக பார்த்துவிட்டேன்.

25 வருஷம் ஜெயிலில் போட்டாலும் கவலை இல்லை. கட்சிப் பணிகளைத் தொய்வின்றி நடத்துவோம். 2 கோடி தொண்டர்கள் எங்களோடு இருக்கிறார்கள். ஒரு கட்சியை அழித்து இன்னோரு கட்சி வளரமுடியாது.  ஏற்கெனவே திகார் ஜெயில் வரை பார்த்துவிட்டேன். இன்னும் 25 ஆண்டு ஜெயிலில் போட்டாலும் கவலை இல்லை. பொதுச்செயலாளர் சசிகலா இங்கே இல்லை. கட்சி நடக்கவில்லையா? சாதாரண தொண்டன் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கினோம். இரண்டு கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். கட்சி எழுச்சியோடு நடக்கும். 

எம்.பி பென்ஷன் பணத்தில்தான் நான் வாழ்கிறேன். எனது மனைவி பிஸினெஸ் செய்கிறார். அதுபற்றி வருமான வரித்துறை கேள்வி கேட்டால் பதில் சொல்வார். பாண்டிச்சேரி அருகே இருக்கும் எனது பண்ணை வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றுள்ளார்கள். அங்கு வேலைக்காரர்கள் குடும்பம் மட்டுமே உள்ளது. அங்கு சென்ற வருமான வரித்துறையினர் எதையாவது வைத்து எடுத்துவிடக்கூடாது. ஒரு கட்சியை அழித்து இன்னோரு கட்சி வளர முடியாது. அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அதை பி.ஜே.பி அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். நான் இல்லாவிட்டாலும் சாதாரண தொண்டன் கட்சியை நடத்துவான். இந்த சோதனை என்ற பூச்சாண்டி எங்களிடம் எடுபடாது'' என்று எச்சரித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!