நில அபகரிப்பு புகார்: ஜெயா தொலைக்காட்சி மீது மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு!

சென்னை: நிலஅபகரிப்பு புகார் கொடுத்தவர் மீதும்,அது தொடர்பான பேட்டியை ஒளிபரப்பிய ஜெயா தொலைக்காட்சி மீதும்  திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (69).இவர் கடந்த 4-ம்  தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் கொடுத்தார்.அந்த புகாரில் தனது  ரூ.150 கோடி மதிப்புள்ள சொத்தை மு.க.ஸ்டாலின் அபகரிப்பு செய்ய முயற்சிப்பதாக  கூறியிருந்தார்.

இதுபற்றி அவர் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார்.அதை ஜெயா தொலைக்காட்சி  ஒளிபரப்பியது.

இதனையடுத்து இது தொடர்பாக திமுக சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் டி.ஜி.பி.யிடமும் மனு  கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் மு.க. ஸ்டாலின் இன்று எழும்பூர் தலைமை பெருநகர நீதிமன்றத்திற்கு  நேரில் வந்தார்.

மாஜிஸ்திரேட்டு நசீர்முகமது முன்னிலையில் ஆஜராகி நில அபகரிப்பு புகார் கொடுத்த  ஆறுமுகம்,அதனை ஒளிபரப்பிய ஜெயா  தொலைக்காட்சி துணைத்தலைவர் ரகுநாதன்  ஆகியோர் மீது அவதூறு மற்றும் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு மீது வருகிற 15-ம் தேதி விசாரணை நடைபெறும் என்று மாஜிஸ்திரேட்டு  அறிவித்தார்.

நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம்  பேசுகையில்,"நிலம் அபகரிக்கப்பட்டதாக என்மீது பொய்யான புகார்  கொடுக்கப்பட்டுள்ளது. அது முற்றிலும் தவறானது. இதுதொடர்பாக அவர் மீது  நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் டி.ஜி.பி.யிடம் திமுக சட்டப்பிரிவு சார்பில்  விளக்கம் அளித்து மனு கொடுக்கப்பட்டது.

இதை தெரிந்து இருந்தும் ஜெயா தொலைக்காட்சி அந்த பொய்யான செய்தியை தொடர்ந்து  ஒளிபரப்பியது.எனவே ஜெயா தொலைக்காட்சி மீது மானநஷ்ட வழக்கு  தொடர்ந்துள்ளேன்.

தற்போது ஆளுங்கட்சிக்கு எதிராக திமுக சார்பில் கருப்பு சட்டை அணிந்து வீடு வீடாக  துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.இதற்கு பொதுமக்களிடம் அமோக வரவேற்பு  கிடைத்துள்ளது. இதை மறைப்பதற்காக திட்டமிட்டு பொய்யான புகார்களை கூறி  வருகிறது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!