`வருமான வரித்துறை ரெய்டுகள் கன்னித்தீவு கதைபோலத்தான்!' - கலகலத்த ஸ்டாலின்

சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளிலும்  அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் இன்று அதிகாலையிலிருந்து வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். சுமார் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடந்துவரும் நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க-வின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், ஐ.டி ரெய்டு பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், `தமிழகத்தில், வருமான வரித்துறை ரெய்டு தொடர்ச்சியாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. குட்கா புகாரில் நடந்த ரெய்டு என்னவாயிற்று? ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகாரின் பேரில் நடந்த ரெய்டு என்னவாயிற்று? இப்படித் தொடர்ந்து நடந்துவரும் ரெய்டுகளின் நிலை என்ன என்பதுகுறித்து தெளிவு இல்லை. தினத்தந்தி ’கன்னித்தீவு’ தொடர் போலத்தான் வருமானவரித்துறை சோதனைகள்.  இதைப் பற்றி கருத்து கூறுவதற்கு ஒன்றுமில்லை' என்றவரிடம், `ரெய்டு அரசியல் நோக்கத்தோடு நடத்தப்பட்டதா' என்று கேட்டதற்கு, `என்னிடம் விளக்கம் கேட்பதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரிடம்தான் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். அவர் பதில் சொன்ன பிறகு, நான் கருத்து கூறுகிறேன்' என்று முடித்துக்கொண்டு கிளம்பினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!