இன்னைக்கு தினகரன்.... அன்னைக்கு சேகர் ரெட்டி, ராமமோகன ராவ் ரெய்டுகள் என்ன ஆச்சு? | What about raid on Sekar reddy, Ram manohar rao? - asks party leaders

வெளியிடப்பட்ட நேரம்: 15:59 (09/11/2017)

கடைசி தொடர்பு:15:59 (09/11/2017)

இன்னைக்கு தினகரன்.... அன்னைக்கு சேகர் ரெட்டி, ராமமோகன ராவ் ரெய்டுகள் என்ன ஆச்சு?

ரெய்டு

அ.தி.மு.க அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் காலைமுதல் நடந்துவரும் வருமானவரித் துறையினரின் ரெய்டு, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அரசியல் பழிவாங்கல் என்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

அதிரடிச் சோதனைகுறித்து நாம் தொடர்புகொண்டு கேட்டதற்கு, தலைவர்கள் கூறிய கருத்து வருமாறு: 

தமிமுன் அன்சாரி (பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயகக் கட்சி):

ரெய்டு தமிமுன் அன்சாரி

”சி.பி.ஐ என்பதும் வருமானவரித் துறை என்பதும் மத்தியில் ஆளும் கட்சிகளின் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்படும் நிறுவனங்களாக மாறி வெகுகாலமாகிவிட்டது. இப்போது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் எனும் அடிப்படையில், அரசியல் விருப்பு, வெறுப்பை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த நிறுவனங்களைப் பயன்படுத்தும் போக்கு நீண்டகாலமாகத் தொடர்கிறது என பொதுமக்கள் கருதுவது உண்மையாகி இருக்கிறது.

இந்த ரெய்டு மூலம் மக்களிடம் டி.டி.வி தினகரனுக்கு அனுதாபத்தை உருவாக்குகிறார்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும். அவரது ஆதரவாளர்களும் அவரது தரப்பு அ.தி.மு.க-வினருக்கும் மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்க இந்த ரெய்டு உதவியிருக்கிறது. தினகரன் ஆதரவாளர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் மட்டும் சோதனை நடத்தினால் அம்பலப்பட்டுவிடுவோம் என்பதற்காக, வேறு சிலருடைய இடங்களிலும் தேடுதல் நடத்தப்படுகிறது. தமிழக மக்களிடம் பா.ஜ.க எதிர்ப்பு மேலும் கூர்மைப்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவு.”

ஆர். முத்தரசன் (மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி):

ரெய்டு முத்தரசன்

” தமிழகத்தில் இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடக்கின்றன. வரி ஏய்ப்பு செய்ததாக சேகர் ரெட்டி தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், 33 கோடி ரூபாய் மதிப்புள்ள  இரண்டாயிரம் ரூபாய் புத்தம்புது நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. அதுவும் அந்தப் பணத்தாள், மக்களிடம் புழக்கத்துக்கு வராதபோது, எந்த வங்கியின் கிளையிலிருந்து அந்தப் பணம் கிடைத்தது எனும் விவரம் இதுவரை தெரியவில்லை. அந்தச் சோதனையில் கைப்பற்றப்பட்ட டைரியில் அரசியல்வாதிகளின் பெயர்கள் இருந்தன; அதைப் பற்றி இன்றுவரை ஒரு தகவலும் இல்லை. 

அதைத் தொடர்ந்து அப்போதைய தலைமைச்செயலாளராக இருந்த ராம மோகனராவ் வீட்டிலும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது, பெரும் அதிர்ச்சிக்குரியது. அப்போது 35 கோடி ரூபாய் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன; அங்கு கிடைத்த டைரியிலும், பல முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இருந்தன. ஆனால், அது தொடர்பான எந்த தொடர் விசாரணையோ தகவலோ இல்லை. இடைநீக்கம் செய்யப்பட்ட அவர், மீண்டும் பணியில் சேர்ந்து, ஓய்வும் பெற்றுவிட்டார். 
 

அடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கரின் இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 89 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத பணம் கைப்பற்றப்பட்டது. சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யார்யாருக்கு எவ்வளவு பணம் விநியோகிக்கப்பட்டது, அதுவும் முதலமைச்சர், கல்வி அமைச்சர் பெயர்கள் எல்லாம் அங்கு கைப்பற்றப்பட்ட டைரியில் இருந்தன; அதன் மீதும் இன்றுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  

ஜி.ஆர் இந்தச் சோதனைகளின் மூலம் மத்திய அரசு தனக்குப் பணியவேண்டும், தன் சொல்படி நடக்கவேண்டும் என்பதற்காக, அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுகிறது. இது ஜனநாயகத்துக்கு நல்லது அல்ல. இதையெல்லாம் பார்த்தால் இங்கு சர்வாதிகாரத் தன்மையைப்போன்று மத்திய அரசு நடந்துகொள்கிறது.

அ.தி.மு.க-வின் உட்கட்சி விவகாரத்துக்குள் போக நான் விரும்பவில்லை. தங்களை விமர்சிப்பவர்கள்மீது, வருமான வரித்துறையை பயன்படுத்தி மிரட்டும்  மத்திய அரசின் அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.” 

சி.பி.எம் கட்சியின் மாநிலச்செயலாளர்  ஜி.இராமகிருஷ்ணனைத் தொடர்புகொண்டபோது, இதுபற்றி பிறகு பேசுவதாகத் தெரிவித்தார்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close