புகைப்படக் கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பார்வையிட்டார் பன்னீர்செல்வம்!

தேனி மாவட்டத்தில், இன்று மாலை எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழா நடைபெறுவதையடுத்து, மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை, விழா நடைபெறும் மேடைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் புகைப்படக் கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பார்வையிட்டார், துணை முதல்வர் பன்னீர்செல்வம். அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் மற்றும் மதுசூதனன் ஆகியோர் உடனிருந்தனர்.

புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்ட அமைச்சர்கள், தமிழக அரசுத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஸ்டால்களைப் பார்வையிட்டனர். வேளாண்துறை, வனத்துறை, தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, வேளாண் பொறியியல்துறை உட்பட அனைத்துத் துறைகளைச் சேர்ந்த ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்தையும் பார்வையிட்டு, துறை அதிகாரிகளைப் பாராட்டினார் பன்னீர்செல்வம். அடுத்ததாக, மாலை 3 மணியளவில் தொடங்க இருக்கும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேச இருக்கிறார். 

டி.டி.வி. தினகரன் தரப்பு ஆதரவாளர்கள் இல்லம் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுவரும் சூழலில் எந்தவித சலனமும் இல்லாமல் அமைச்சர்கள் விழாவுக்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தினகரன் ஆதரவாளரும் தேனியைச் சேர்ந்தவருமான தங்க தமிழ்ச்செல்வன் தரப்பில் எந்தவித சோதனையும் நடைபெறவில்லை என்பது கவனிக்கப்படவேண்டியதாக இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!