' ஸ்ரீனி வெட்ஸ் மகி!' - கல்யாண கெட்டப்பில் களமிறங்கிய ஐ.டி! #ITRaid | 'Srini weds Mahi' - IT officer's new get up

வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (09/11/2017)

கடைசி தொடர்பு:18:49 (09/11/2017)

' ஸ்ரீனி வெட்ஸ் மகி!' - கல்யாண கெட்டப்பில் களமிறங்கிய ஐ.டி! #ITRaid

சசிகலா உறவினர்களைக் குறிவைத்து நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனை, அ.தி.மு.க வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ' சசிகலா உறவுகளைக் குறிவைத்து நடத்தப்படப் போகும் சோதனை குறித்த தகவல்களை அதிகாரிகள் ரகசியமாக வைத்திருந்தனர். இதற்கென அதிகாரிகள் கையாண்ட யுக்தி, மன்னார்குடி சொந்தங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

dinakaran

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, போயஸ் கார்டனுக்கு நெருக்கமாக இருந்த சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. சசிகலா குடும்பத்தை வழிக்குக் கொண்டுவரும்விதமாகவே இந்த ரெய்டு நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதன்பிறகு, சில மாதங்கள் அமைதியாக இருந்த ஐ.டி அதிகாரிகள், ஆர்.கே.நகர் தேர்தலின்போது தினகரனை குறிவைத்து களமிறங்கினர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டின் மூலம் அமைச்சர்கள் பலரும் சிக்கினர். அடுத்து வந்த நாள்களில் அதிகாரத்திலிருந்து தினகரனை ஒதுக்கிவைக்கும் காட்சிகளும் அரங்கேறின. இந்நிலையில், இன்று காலை நடந்த வருமான வரித்துறை சோதனையில் சசிகலா உறவினர்கள் அனைவரையும் வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர் அதிகாரிகள்.

it raid
 

தினகரன், திவாகரன், விவேக் ஜெயராமன், டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் சிவக்குமார், கலியபெருமாள், கிருஷ்ணபிரியா என ஒருவரும் இந்தச் சோதனையிலிருந்து தப்பவில்லை. இந்தச் சோதனை குறித்து தினகரனோ விவேக் ஜெயராமனோ பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஜெயா டி.வியில் சோதனை நடந்தபோது, நிருபர்களுக்குத் தேநீர் உபசரிப்பு உள்ளிட்டவற்றை வழங்கச் சொல்லியிருக்கிறார் விவேக். அடையாறு வீட்டில் இருந்த தினகரனும், கோ பூஜையை நடத்திக்கொண்டிருந்தார். 

it raid

வருமான வரித்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். "சசிகலா உறவினர்களின் வீடுகளில் ரெய்டு நடத்துவதை முன்கூட்டியே தீர்மானித்திருந்தோம். அவர்களின் பணப் போக்குவரத்து, வர்த்தகம் என அனைத்து விவரங்களையும் விரிவாகச் சேகரித்துவிட்டோம். மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியத்தின் உத்தரவுக்காகக் காத்திருந்தோம். வருமான வரி கட்டாமல் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். எங்களைப் பொறுத்தவரையில் இது நிர்வாகரீதியான ஒரு நடைமுறை. இன்று காலை நுங்கம்பாக்கம் ஆயக்கர் பவனிலிருந்து கிளம்பியபோது, தனியார் டிராவல்ஸ் நிறுவனத்திலிருந்து வாகனங்கள் வந்திருந்தன. ரெய்டுக்குச் செல்லப் போகும் தகவல் தெரியக் கூடாது என்பதால், காரின் முகப்பில் 'Srini Weds Mahi’ என்ற பேப்பரை ஒட்டினோம். திருமணத்துக்குச் செல்லும் வாகனம் போல, காரின் அடையாளத்தை மாற்றிவிட்டோம். நாங்கள் எதிர்பார்த்தது போல, ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கிறோம். இன்று மாலைக்குள் கைப்பற்றப்பட்ட பொருள்களின் விவரங்கள் வெளியிடப்படலாம்" என்றார் விரிவாக. 

நடிகர் ரஜினி நடித்த சிவாஜி திரைப்படத்தில், ஐடி ரெய்டு பற்றிச் சொல்லும் போது ‘இன்று இரவு உங்கள் வீட்டில் கல்யாணம்’ எனக் குறிப்பிடுவார் ரஜினி. அதே பாணியைத்தான் கடைபிடித்துள்ளனர் வருமான வரித்துறையினர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க