எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை அம்மா பூங்காவில் நடத்த எதிர்ப்பு! உயர் நீதிமன்றம் உத்தரவு

ராமநாதபுரத்தில் இம்மாதம் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கான இடத்தினை மாற்ற வேண்டும் என்ற மனுவின் மீது இரு வாரங்களுக்குள் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
 
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழக அரசின் சார்பில் ஓர் ஆண்டுக்குக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாக்கள் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் நடத்தப்படுகின்றன. ராமநாதபுரத்தில் நவம்பர் 25-ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியின் மூலம் உருவாக்கப்பட்ட அம்மா பூங்காவில்  கொண்டாடப்பட உள்ளது. 
இதற்கான கால்கோல் விழா நவம்பர் 3-ம் தேதி ராமநாதபுரம் அம்மா பூங்காவில் நடந்தது. இந்த விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திரபாலாஜி, ராஜலெட்சுமி, மணிகண்டன், பாஸ்கரன், எம்.பி அன்வர்ராஜா ஆகியோர் பங்கேற்று பந்தல் காலை நட்டனர்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடக்க உள்ள அம்மா பூங்கா

இந்நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் அம்மா பூங்காவில் விழாவினை நடத்தாமல் மாற்று இடத்தில் நடத்த உத்தரவிடக் கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜு என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 அந்த மனுவில் ''ராமநாதபுரம் நகராட்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கான பல வசதிகளுடன் அம்மா பூங்கா அமைக்கப்பட்டது. மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பூங்கா நிறைவேறிய மகிழ்வில் அப்பகுதி மக்கள் உள்ளனர். அதன் பராமரிப்பிற்கென பெரியவர்கள் மாதம் 100 ரூபாயும், சிறுவர்கள் 50 ரூபாயும் செலுத்துகின்றனர்.

இதனை விடுத்தால் பொதுமக்கள் பொழுதுபோக்கவும், நடைபயிற்சி மேற்கொள்ளவும், ஓய்வெடுக்கவும், விளையாடவும் வேறு இடம் இல்லை. இந்நிலையில் தற்போது நவம்பர் 25-ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட அம்மா பூங்காவைத் தேர்வு செய்துள்ளனர். விழாவில் கலந்து கொள்ளும் பெரும் கூட்டத்தாலும், அதற்கான கட்டமைப்பு பணிகளாலும், பல லட்சம் செலவு செய்து உருவாக்கப்பட்ட பூங்காவின் கட்டமைப்பு சிதைந்துவிடும். மேலும் பொதுமக்களின் பயன்பாடும் சில நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்படும். 

எனவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் இடத்தை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும். மேலும் பூங்காவிலுள்ள இருக்கைகள், உபகரணங்கள் ஆகியவற்றை மாற்றியமைக்க தடை விதிக்க வேண்டும் " எனக் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், அப்துல் குத்தூஸ் அமர்வு மனுதாரரின் மனுவை பரிசீலித்து 2 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!