டெல்லியில் களைகட்டும் இயற்கை விவசாய மாநாடு

19-வது ஆர்கானிக் வேர்ல்டு காங்கிரஸ் என்னும் இயற்கை விவசாய மாநாடு டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸிபிஷன் மார்ட்டில் இன்று தொடங்கியது. "முன்று நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.  இதன் தொடக்க விழாவில், மத்திய விவசாயிகள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங், சிக்கிம் மாநில முதல்வர் பவன்குமார் சாம்லிங், ஐ.எப்.ஓ.எம் தலைவர் ஆண்ரே லே, ஓபாயின் தலைவர் சுஜாதா கோயல், உத்தரப் பிரதேச வேளாண்துறை அமைச்சர் சூர்ய  பிரதாப் சாகில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இயற்கை விவசாய மாநாடு 2017


நிகழ்வில் பேசிய அமைச்சர் ராதா மோகன் சிங், "நீண்ட காலமாகவே இயற்கை விவசாயத்தைப் பின்பற்றி வரும் நாடு இந்தியா. இப்போதும் அது தொடர்கிறது. நம்முடைய பாரம்பர்ய இயற்கை விவசாயம்தான் சிறந்தது. அதற்கு அரசு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இயற்கை விவசாயத்துக்கு உதவி வரும் அபிடா அமைப்பின் பணிகள் பாேற்றுதலுக்குரியன. மற்ற நாடுகளைவிட இந்திய வேளாண்துறை தொடர்ந்து இயற்கை விவசாயத்துக்கு ஆதரவாக இருந்து வருகிறது. இயற்கை விவசாயம் வளர்வதற்கு உறுதுணையாக இருப்போம்" என்றார்.

சிக்கிம் மாநில முதல்வர் சாம்லிங் பேசும்போது, "நாங்கள் இயற்கை விவசாயத்தை பெயரளவில் இல்லாமல் செயலளவில் நிரூபித்து வருகிறோம். எங்களைப் போன்றே மற்ற மாநிலங்களும் இயற்கை விவசாயம் செய்ய முன்வர வேண்டும்" என்றார்.

ஐ.எப்.ஓ.எம் தலைவர் ஆண்ரே லே பேசும்போது, "முன்று வருடங்களுக்கு ஒருமுறை இந்த மாநாட்டை நடத்தி வருகிறோம். உலகம் முழுவதுமுள்ள இயற்கை விவசாயிகள் தங்களுடைய இயற்கை விவசாய தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் தளம் இது. சென்றமுறை துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் நடத்தினோம். நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைப்போலவே இந்தியாவிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது" என்றார். 

இயற்கை விவசாய மாநாடு 2017


டெல்லியில் கடந்த சில நாள்களாக இருந்துவரும் குளிர், பனிமூட்டம் இவற்றையும் தாண்டி ஆயிரக்கணக்கானார் மாநாட்டில் கலந்துகொண்டு வருகின்றனர். இயற்கை விவசாய விளைபொருள்களை மார்க்கெட் செய்வது, தொழில்நுட்பங்களை வளர்த்தெடுப்பது பற்றி கருத்தரங்கு அமர்வுகள், பயிற்சி பட்டறைகள் ஆகியவை முன்று நாள்களும் நடைபெற உள்ளது. இயற்கை விவசாயம் பற்றி  அ முதல் ஃ வரை தெரிந்து கொள்வதற்கு இந்த மாநாடு உதவியாக இருக்கும். இயற்கை விவசாய விஞ்ஞானிகள், வல்லுநர்கள், விவசாயிகள், மரபணு மாற்று பயிர் எதிர்ப்பாளர்கள் என்று பலரும் வருகை புரிந்துள்ளனர். ஒவ்வொரு மாநிலமும் தனது ஆர்கானிக் அரங்குகளை அமைத்துள்ளது. இதில் சிக்கிம் மாநில அரங்கு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!