”அந்த மாணவனை இளைஞனாகக் கருதி தூக்கிலிடுங்கள்” - ரேயன் பள்ளியில் உயிரிழந்த சிறுவனின் தந்தை குமுறல்! 

ரேயன் பள்ளி

குர்கானிலுள்ள ரேயன் பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படிக்கும் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், நேற்று (புதன்கிழமை) அதே பள்ளியில் படிக்கும் பதினொன்றாம் வகுப்பு மாணவனை சந்தேகித்து சிபிஐ கைது செய்தது.

கடந்த செப்டம்பர் மாதம் 8ம் தேதி, பிரதுமன் என்ற சிறுவன் ரேயன் பள்ளி கழிப்பறையில், கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தான்.  நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகிய இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து,  சிபிஐ விசாரித்து வருகிறது. 

சிபிஐயின் முதற்கட்ட விசாரணையில், அந்தச் சிறுவனைக் கொலை செய்தது,  பள்ளிப் பேருந்து நடத்துநரான அசோக் குமார் எனச் சந்தேகித்து, அவர் கைது செய்யப்பட்டார். அவரும் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், அசோக் குமாரின் குடும்பத்தினர், அவரை இந்த வழக்கில் சிக்கவைத்துள்ளதாகக் குற்றச்சாட்டினர்.  
இந்த நிலையில், வழக்கின் புதிய திருப்பமாக, அதே பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் படிக்கும் மாணவனை சந்தேகித்து சிபிஐ கைது செய்துள்ளது. மேலும், பள்ளித் தேர்வை ஒத்திவைக்கவே இந்தக் கொலை அவன் செய்ததாக சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கடுத்து, அந்த மாணவனை ஆறு நாள்கள் காவலில் வைக்கக் கோரியது சிபிஐ. தற்போது, அவனை மூன்று நாள்கள் சிபிஐ காவலில் வைக்க குர்கான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  

சிறுவன் பிரதுமனின் பெற்றோர், அந்த மாணவனை 18  வயது இளைஞனாகக் கருதி, தூக்குத் தண்டனை அளிக்கவேண்டும் என்று கோரியுள்ளனர். இது தொடர்பாக  அவர்கள்  தரப்பு வழக்கறிஞர் சுஷில் டெக்ரிவால்(Sushil Tekriwal )  கூறுகையில், “அந்த மாணவனை இளைஞனாகக் கருதி, கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.’ என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!