வெளியிடப்பட்ட நேரம்: 23:35 (09/11/2017)

கடைசி தொடர்பு:16:39 (12/07/2018)

விபத்தில் உயிரிழந்த மகனின் கண்களை தானம் செய்ய முன்வந்த தந்தை! அலட்சியம் செய்த அரசு மருத்துவர்

விபத்தில் உயிரிழந்த மாணவனின் கண்களை தானமாக பெற்றுக்கொள்ள அரசு மருத்துவமனை மருத்துவர் மறுத்ததால் பெற்றோர்கள் ராமநாதபுரம் கோட்டாட்சியரிடம் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து கண்கள் தானமாகப் பெறப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே தபால்சாவடி என்ற கிராமத்தில் வசித்துவந்த விஜயராகவன் மகன் மதுபாலா(14). இவர் சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 -ம் வகுப்புப் படித்துவந்தார். நேற்று இரவு அவரது வீட்டிலிருந்த மாடு காணாமல் போகவே, அதைத்தேடி மதுரை -மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் தேடிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே மதுபாலா உயிரிழந்தார்.

இதுதொடர்பாக சத்திரக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், உயிரிழந்த மாணவர் மதுபாலாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது. அப்போது மதுபாலாவின் பெற்றோர்களும், உறவினர்களும் அவரது உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்ய விரும்புவதாகவும், முக்கியமாக இரு கண்களையும் எடுத்துக்கொள்ளுமாறும் கூறியுள்ளனர். அதற்கு அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரிந்த மருத்துவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, பெற்றோர்கள் ராமநாதபுரம் கோட்டாட்சியர் பேபியிடம் இதுகுறித்து புகார் செய்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் பேபி,  மருத்துவமனைக்கு நேரில் வந்து கண்தானம் பெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

விபத்தில் இறந்த மகனின் கண்களை தானம் செய்த தந்தை

ராமநாதபுரத்தில் கண்களை தானமாக பெறும் சமூகசேவை அமைப்பான ஞானதீப சேவா சங்க நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு கண்தானம் பற்றி அவர் கூறியுள்ளார். இதையடுத்து, சங்கத்தின் சார்பில் கண் மருத்துவர் சுபா.சங்கரி, மாணவர் மதுபாலாவின் உடலிலிருந்து கண்களை அகற்றினார். பிறகு மகனின் கண்களை மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு மதுபாலாவின் தந்தை, ஞானதீப சேவா சங்க கண் தான மைய நிர்வாகி மணிமாறன் மூலம் வழங்கினார். மகனை விபத்தில் பறிகொடுத்த நிலையிலும், அவனது உறுப்புகளாவது பிறருக்குப் பயன்படட்டும் என்ற நல்ல எண்ணத்தில் கண்களைத் தானமாக வழங்கிய மதுபாலாவின் பெற்றோர்களின் செயல் ராமநாதபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வன், ஞானதீப சேவா சங்கத் தலைவர் கோகுலகண்ணன் மற்றும் மருத்துவமனையில் கூடியிருந்த பொதுமக்கள் பலரையும் நெகிழ வைத்தது.

விபத்தில் உயிரிழந்ததால் மதுபாலாவின் கண்கள் தானம் செய்யப்படது


 ஊரெல்லாம் உடல் தானம் செய்யுங்கள் எனப் பல லட்ச ரூபாய் செலவழித்து அரசு விளம்பரம் செய்துவரும் நிலையில், தாமாகவே முன் வந்து தனது மகனின் கண்களை தானம் கொடுக்க விரும்பிய ஒரு தந்தையின் வலியைப் புரிந்துகொள்ளாமல் கண் தானத்தை புறக்கணித்த மருத்துவரின் செயலை என்னவென்று சொல்வது.