டெங்குக் காய்ச்சலுக்கு பட்டதாரிப் பெண் பலியான சோகம்!

நெல்லையில் டெங்குக் காய்ச்சல் காரணமாக முதுகலைப் பட்டதாரிப் பெண் ஒருவர் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. அதனால் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். 

டெங்கு பலி - சுதா

நெல்லை மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. 10 தினங்களுக்குள் டெங்கு இல்லாத மாவட்டமாக நெல்லையை மாற்ற உறுதி எடுத்து பணியாற்றப்பட்டு வரும் சூழலில், காய்ச்சலின் தீவிரம் இன்னும் குறைந்தபாடில்லை. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிக்கப்பட்டு வரக்கூடியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. 

இந்த நிலையில், நெல்லை சி.என்.கிராமம் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த காந்தி என்பவரின் 22 வயது மகள் சுதா கடந்த 3 நாள்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டுவந்துள்ளார். அவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் பலன் இல்லாமல் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். சுதா எம்.ஏ பட்டதாரி. அவரது மரணம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி லட்சுமிபுரம் பகுதி மக்கள் கூறுகையில், ‘எங்களுடைய பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் காரணமாக இந்தப் பகுதியில் நிறைய பேருக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. மர்மக் காய்ச்சல் காரணமாக இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது சுதா பலியாகி இருக்கிறார். ஆனால், அவரது மரணத்துக்கு டெங்கு பாதிப்பு என அறிவிக்காமல் வைரஸ் காய்ச்சலால் உயிர் இழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இந்தப் பகுதியில் டெங்குக் கொசுக்களை ஒழிக்க மாநகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்தனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!