வெளியிடப்பட்ட நேரம்: 10:59 (10/11/2017)

கடைசி தொடர்பு:10:59 (10/11/2017)

சென்னையில் இரண்டாவது விமான நிலையம்.. அரசு முன் இருக்கும் சவால்கள்!

சென்னை விமான நிலையம், chennai airport

சென்னைக்குள் தினந்தோறும் வந்து செல்பவர்களின் எண்ணிக்கை மட்டும் பல லட்சங்களைத் தாண்டும். சாலைவழி, ரயில், விமானம், கடல்வழி என மொத்தப் போக்குவரத்து அம்சங்களும் சென்னையுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் சென்னை விமான நிலையத்திற்கு ஸ்பெஷல் இடம் உண்டு. சுற்றுலா, மருத்துவம், வணிகம் மற்றும் பல்வேறு தேவைகளுக்காகத் தினந்தோறும் சென்னைக்குள் வான்வழியாக வரும் உள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்கும் முக்கிய இடம் சென்னை விமான நிலையம். மக்கள் நடமாட்டத்தால் விறுவிறுவென இயங்கிக்கொண்டிருக்கும் சென்னை விமான நிலையம், இந்தியாவின் நான்காவது பரபரப்பான விமான நிலையம். முதல் மூன்று இடங்களை டெல்லி, மும்பை, பெங்களூரு பிடித்திருக்கிறது. ஆசிய அளவில் 49-வது பரபரப்பான விமான நிலையம் சென்னையினுடையது. இங்கு உள்நாட்டு முனையம் மற்றும் பன்னாட்டு முனையம் இரண்டும் ஒரே பகுதியில் அடுத்தடுத்து இயங்கி வருகிறது. இந்திய அளவில், இரு விமான முனையங்கள் ஒரே இடத்தில் முதன்முறையாக இயங்கியது சென்னையில்தான். இதுபோன்ற பல அம்சங்களுடன், சென்னை விமான நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

சென்னை விமான நிலையம், chennai airport

கால தாமதம், விமானங்கள் தரையிறங்குவதில் பிரச்னை, இட நெருக்கடி போன்ற சிக்கல்களும் சென்னை விமான நிலையத்தில் சமீபமாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. நேற்று ஒருநாள் மட்டும் 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்து சென்றிருக்கின்றன. இதனால், பயணிகளும், அவர்களை வழியனுப்ப வந்தவர்களும் பெரும் அவதிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக, சென்னை விமானப் போக்குவரத்தில் பெரும் சிக்கல் நீடித்து வந்தது. கடந்த இரண்டு நாள்களாக மழை குறைந்ததால் போக்குவரத்து சீராகும் எனக் கருதப்பட்டது. ஆனால், டெல்லியில் ஏற்பட்ட கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி விமானங்கள் புறப்படுவதிலும், வந்திறங்குவதிலும் நேற்று முன்தினம் தாமதம் ஏற்பட்டது. மேலும், நேற்று காலையிலிருந்து பிற்பகல் வரை விமானப் போக்குவரத்தில் சீரான நிலைமை இல்லை. ஒரு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை விமானங்கள் தாமதமாகின. காத்திருந்த பயணிகளுக்கு முறையான தகவல்கள் தெரிவிக்கப்படாததால் அவர்கள் பெரிதும் குழம்பினர். விமான நேரங்களைக் குறிப்பிடும் டிஜிட்டல் பலகைகளில் இருந்த தகவல்களும் பயணிகளுக்குப் பயன் தரவில்லை. 'கனமழைக்குப் பிறகான நாள்களில் விமான நிலையத்தில் இது வாடிக்கையான ஒன்றுதான்', எனச் சில பயணிகள் அலுத்துக்கொண்டனர். நேற்று ஒருநாள் மட்டும் இவ்வளவு விஷயங்கள் நடந்தேறியிருக்கின்றன. தினம்தோறும் இதுமாதிரியான பிரச்னைகள் வருவதில்லைதான். ஆனால், இனி அடிக்கடி வரத்தொடங்கிவிட்டால் அது பயணிகளை வறுத்தெடுத்துவிடும்.   

இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே சென்னை விமான நிலையம் தொடர்பான செய்தி ஒன்று பரவத்தொடங்கியிருக்கிறது. சென்னையில், மேலும் ஒரு விமான நிலையம் விரைவில் வரவிருக்கிறது என்பதுதான் அது. இதுதொடர்பாக, விமான நிலையங்கள் ஆணையத் தலைவர் குருபிரசாத் மொஹபத்ரா பேசியபோது,

சென்னை விமான நிலையம், chennai airport

“கடந்த வருடம் மட்டும் சென்னை விமான நிலையத்தைப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 84 லட்சம் பேர். கடந்த ஒன்றரை வருடமாக ஒரு மணி நேரத்திற்கு 28 விமானங்கள் வரை கையாள்கிறோம். இன்னும் வரும் காலங்களில் சென்னை விமான நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நிச்சயம் உயரும். அதுமேலும் 12 சதவிகிதம் வரை உயர வாய்ப்பிருக்கிறது. அச்சமயத்தில், ஒரு மணி நேரத்திற்கு 40 விமானங்கள் வரை கையாள்வதற்கு நாங்கள் தயாராக வேண்டியிருக்கிறது. இதனால், சென்னைக்கு, மேலும் ஒரு விமான நிலையத்தின் தேவை இருக்கிறது. இதுதொடர்பாக விமானப் போக்குவரத்துத்துறை செயலாளர் ஆர்.என்.சவுத்ரி மற்றும் விமான நிலையங்களின் அதிகாரிகள் தமிழக அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதுவரை இரண்டு முறை பேச்சுவார்த்தைக் கூட்டம் நடந்திருக்கிறது. அப்படி சென்னையில் மற்றொரு விமான நிலையம் அமையும் பட்சத்தில், அது ‘பசுமை விமான நிலைய’மாகக் கட்டமைக்கப்படும். இதற்கு, 500 மில்லியன் டாலர்கள் வரை செலவாகலாம். கொல்கத்தாவிலும் கூடுதலாக ஒரு விமான நிலையம் அமைக்கப்படவிருக்கிறது”, என்றார் அவர். 

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் எங்கு அமையும் என்பதுதான் இப்போதைய பெரும் கேள்வி?. ஏனெனில், இரண்டு நாள்கள் சேர்ந்தாற்போல கனமழை அடித்தாலே தற்போதைய சென்னை விமான நிலையம் ‘திடீர்’ ஏரியாகிவிடுகிறது. 2015 பெருவெள்ளத்தின் போது முற்றிலும் முடங்கிப்போனது சென்னை விமான நிலையம். அப்போது, அரக்கோணம் அருகே இருக்கும் ராசாளி விமானத் தளம், சென்னையின் தற்காலிக விமான நிலையமாகச் செயல்பட்டது. இதுபோன்ற, காரணங்கள் குவிந்து இருப்பதால் இரண்டாவது விமான நிலையத்திற்கு இடத்தைத் தேர்வு செய்வதுதான் முதல் சவாலாக இருக்கும். மற்றொறு சவால், மேற்கூரைகளையும், கண்ணாடிகளையும் உடைந்து விழாமல் கட்டத்தெரிந்த நல்ல பொறியாளரைப் பிடிக்க வேண்டும்! 
 


டிரெண்டிங் @ விகடன்