விவேக்கை வளைக்கும் 'அந்த' 3 லாக்கர்கள்!  - ஜாஸ் சினிமாஸ் ஊழியர்களோடு கைகோத்த ஐ.டி 

ஜெயா டி.வி

சிகலா உறவினர்களை மையப்படுத்தி இரண்டாவது நாளாக நீடிக்கும் வருமான வரித்துறை சோதனை, மன்னார்குடி குடும்ப உறவுகளை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. ' விவேக்கின் மாமனார் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமும் ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்தில் உள்ள லாக்கர்களும் விவேக் ஜெயராமனுக்குக் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது' என்கின்றனர் வருமான வரித்துறை வட்டாரத்தில். 

சென்னை நுங்கம்பாக்கம், ஆயக்கர் பவனில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் கடந்த சில நாள்களாக வழக்கத்துக்கு மாறான சுறுசுறுப்புடன் வலம் வந்து கொண்டிருந்தனர் அதிகாரிகள். ' இந்தமுறை எந்த இடத்தை நோக்கி தேடுதல் வேட்டை நடக்கப் போகிறது?' என்பதை மிகுந்த ரகசியமாகவே வைத்திருந்தார்கள். வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவின் இயக்குநர் ஜெனரல், இயக்குநர், கூடுதல் இயக்குநர்கள் என நான்கு பேர் மட்டுமே, நாள்தோறும் கூடிப் பேசியுள்ளனர். தேடுதலுக்கான நாள் குறித்தவுடன், 'எவ்வளவு செலவீனம்?' என்ற விவரங்களைப் பட்டியலிட்டு, வழக்கமாகச் செல்லும் டிராவல் வாகனங்களைத் தவிர்த்துள்ளனர். வேறு ஒரு நிறுவனத்திலிருந்து கார்களை வரவழைத்துள்ளனர். சென்னை, கோவை, நீலகிரி, தஞ்சை, நாகை, பாண்டிசேரி என சசிகலா குடும்ப உறவுகளின் வியாபாரம் நீளும் இடங்களை எல்லாம் துருவி ஆராய்ந்துள்ளனர். தினகரன் தரப்பில் இந்தச் சோதனைகளைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதேநேரம், ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக் ஜெயராமன் தரப்பில் சற்று கவலையில் ஆழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர் கார்டன் நிர்வாகிகள். 

விவேக் ஜெயராமன்" சசிகலா அண்ணன் ஜெயராமனின் மனைவி இளவரசியின் வாரிசுகளைக் குறிவைத்துத்தான் இந்த ரெய்டு நீண்டு கொண்டிருக்கிறது. விவேக் ஜெயராமன், கிருஷ்ணபிரியா, ஷகிலா ஆகியோரது வீடுகளில் இன்னும் தேடுதல் வேட்டை முடியவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலையாகி, கார்டன் வந்த நேரத்தில்தான் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார் விவேக். இந்த நிறுவனத்துக்காக பிரபல தியேட்டர்கள் மிரட்டி வாங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தி.மு.க தலைவர் கருணாநிதி, விவேக்கின் பெயரைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆட்சியிலிருந்து ஜெயலலிதா ஆசியுடன் இந்தத் தியேட்டர்கள் வாங்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. நேற்று வேளச்சேரியில் உள்ள ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்துக்கு அதிகாரிகள் வந்தபோது, விவேக் தரப்பில் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அங்கிருந்த மூன்று லாக்கர்களைத் திறக்க முடியாமல் அதிகாரிகள் திணறியுள்ளனர்.

அப்போது அங்கிருந்த வருமான வரித்துறை அதிகாரி ஒருவர், ஜாஸ் சினிமாஸில் வேலை பார்க்கும் மூன்று உதவியாளர்கள் பெயரைக் கூறியிருக்கிறார். ' அவர்களை அழைத்து விசாரியுங்கள். உடனே திறந்துவிடலாம்' எனக் கூற, விவேக் தரப்பில் அதிர்ந்து போய்விட்டனர். பின்னர் அங்கு சேகரிக்கப்பட்ட ஆவணங்களைப் பற்றி மகாலிங்கபுரத்தில் உள்ள விவேக்கின் வீட்டில் இருந்த அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறி, சரிபார்த்துள்ளனர். இந்த ஆவண சரிபார்ப்பு நடவடிக்கையை அதிர்ச்சியோடு கவனித்தார் விவேக். ' இன்று மாலைக்குள் ரெய்டை நடத்திவிட்டுக் கிளம்பிவிடுவார்கள்' என்றுதான் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். இரண்டாவது நாளாக, விவேக்கின் வர்த்தகத் தொடர்புகளை அதிகாரிகள் துருவிக் கொண்டிருப்பதை சரியான ஒன்றாக அவர் பார்க்கவில்லை. ரெய்டு முடிவில், விவேக் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் பரவியுள்ளது" என விவரித்த கார்டன் நிர்வாகி ஒருவர், 

ஜாஸ் சினிமாஸ்

" விவேக் தரப்புக்குக் கூடுதல் தலைவலியைக் கொடுத்திருக்கிறது அவரது மாமனாரும் பர்னிச்சர் தொழிலில் கோலோச்சி வரும் பாஸ்கர் வீட்டில் நடந்து வரும் சோதனைகள். அவர் வீட்டிலிருந்து 2 கோடிக்கும் அதிகமான பணமும் தங்க, வைர நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து கேட்டபோது, ' ஐந்து நாள்களுக்கு முன்புதான் பாஸ்கரின் தம்பி மகன் திருமணம் நடந்தது. அதற்காக வந்த பணம், நகை' எனக் கூறியும் அதிகாரிகள் கேட்கவில்லை. ' இது மொய்ப்பணம்தான்' எனக் கூறி தப்பித்துவிடலாம். ஆனால், ' இந்தப் பணம், நகைகளைக் காட்சிப்படுத்தினால் பெரும் அவமானமாகிப் போய்விடும்' எனக் கருதுகிறார் விவேக். ரெய்டு நடவடிக்கையின்போது அவரிடம் பேசிய வருமான வரித்துறை அதிகாரி ஒருவர், ' சோதனை சம்பந்தமாக மீடியாக்களிடம் பேசக் கூடாது. எந்த அறிக்கையும் வெளியிடக் கூடாது' என அறிவுறுத்தியிருக்கிறார். இதில், இளவரசியின் மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா வீடுகளில் பெரிதாக ஒன்றும் சிக்கவில்லை. திவாகரனின் பண்ணை வீடு, தினகரன் ஆதரவாளர்களின் வர்த்தகத் தொடர்புகள், கோவை, நீலகிரியில் உள்ள சொத்துகள், மன்னார்குடியில் வாங்கிக் குவிக்கப்பட்ட நிலங்கள், ஜாஸ் சினிமாஸ், ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர், மிடாஸ் சாராய ஆலை என சசிகலா குடும்பத்தின் கைகளில் நிறைந்திருக்கும் அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும் சல்லடை போட்டு சலித்துக் கொண்டிருக்கின்றனர். இன்று மாலை 5 மணிக்குள் ரெய்டு முடியும் என நம்பிக்கொண்டிருக்கிறார் விவேக் ஜெயராமன்" என்றார் விரிவாக. 

" மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் நேரடி வரிகள் வாரியத்தின் கண்காணிப்பின்கீழ் சோதனை நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இது நேற்று திட்டமிடப்பட்ட ஒன்று அல்ல. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கிவிட்டது புலனாய்வுப் பிரிவு. ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட காலங்களில், சசிகலா குடும்பத்தினரின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தென்பட்டது. அந்தநேரத்தில்தான், எங்கள் கண்காணிப்பு தீவிரமடைந்தது. கார்டனில் இருந்து கொண்டு செல்லப்பட்ட சொத்து ஆவணங்கள், நகைகள் உள்ளிட்டவை எங்கு சென்றன என்பதை நாங்கள் அறிவோம். சசிகலா தரப்பினரின் ஒவ்வொரு பரிவர்த்தனைகளையும் தீவிரமாகக் கண்காணித்து வந்தோம். நீண்டநாள் உழைப்பின் பலனை அறுவடை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் நேற்று முகூர்த்தம் குறித்தோம். ஆய்வில் கிடைத்த தகவல்களை உரிய நேரத்தில் தெரியப்படுத்துவோம்" என்கிறார் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!