"கடலோர மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை!” - வானிலை ஆய்வு மையம் #TNRains

 

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை, அக்டோபர் 27-ம் தேதி தொடங்கி ஒருவாரம் தொடர்ந்து பெய்தது. கடந்த இரு தினங்களாக சற்றே குறைந்திருந்த மழை, மீண்டும் இன்று வேகத்துடன் பெய்யத் தொடங்கியுள்ளது. 'சென்னை உள்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நாளை முதல் கனமழை பெய்யும்; அதன் தாக்கம் ஒருவாரம் வரை இருக்கும்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கும்முன், சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம், ஆறு அடியாகக் குறைந்து வறண்டு கிடந்தது. ஆனால், மழை பெய்யத் தொடங்கிய பின்னர் தற்போது ஏரிக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்தால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 75.35 அடியாக உள்ளது. மொத்தக் கொள்ளளவு 85.40 அடி. ஏரியில் அதிகபட்சமாக 3,645 மில்லியன் கன அடி நீர் இருப்பு வைக்க முடியும். ஆனால், இந்த ஏரியில் இப்போது 1,344 மில்லியன் கன அடி நீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் இந்த ஏரியில் 452 மில்லியன் கன அடி தண்ணீரே இருந்தது. இந்த ஏரிக்கு 245 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 48 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதாவது, செம்பரம்பாக்கம் ஏரியில் கிட்டத்தட்ட பாதி அளவுக்கு இப்போது நீர் இருக்கிறது. ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால், ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னைக்குக் குடிநீர் வழங்கும் மற்றோர் ஏரியான புழல் ஏரியின்மொத்தக் கொள்ளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது புழல் ஏரியில் 1,314 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதேநாளில் 445 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருந்தது. இந்த ஏரிக்கு 223 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 84 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மொத்த நீர் மட்ட அளவு 50.20 அடியாகும். இப்போது, 39.37 அடி நீர் உள்ளது. 140 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி நீர்த் தேக்கத்தில் இப்போது 130.05 அடி அளவுக்கு நீர் உள்ளது. அணையின் மொத்தக் கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடி நீரில் 853 மில்லியன் கன அடி நீர் உள்ளது. கடந்த ஆண்டு இதேநாளில் 183 மில்லியன் கன அடி நீர் இருந்தது. அணைக்கு இப்போது 427 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 16 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 

 

இந்நிலையில், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலோரத்தில் உள்ள 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. நவம்பர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் கனமழை பெய்யும் என்றும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களிலும் தெற்குக் கடலோர ஆந்திராவிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக டெல்லியில் உள்ள இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அதிகபட்சமாக ஐந்து சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அதே மாவட்டத்தின் மயிலாடியில் நான்கு சென்டி மீட்டரும், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் மூன்று சென்டி மீட்டரும் மழை பெய்துள்ளது. புதுச்சேரியின் காரைக்கால், தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை ஆகிய இடங்களில் தலா இரண்டு சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 15-ம் தேதி வரை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கையால், மக்கள் அதற்கேற்ப முன்னெச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!