அங்கன்வாடிகளுக்கு 38 லட்சம் ரூபாய்! - நெகிழ வைத்த விஜய்சேதுபதி!

தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு அங்கீகாரம் கிடைக்கப் போராடி இன்று டாப் ஹீரோக்களின் வரிசையில் இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. பல திரைப்படங்களில் தற்போது பிஸியாக நடித்துவரும் விஜய் சேதுபதி அண்மையில் விளம்பரப் படம் ஒன்றில் நடித்திருக்கிறார். 

விஜய் சேதுபதி

சமீபமாகவே டிவி சேனல்களில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் அணில் சேமியா பற்றிய விளம்பரப் படம் வெளியாகிவருகிறது. மேலும், சமூக வலைதளங்கள் முழுவதும் விஜய் சேதுபதி முதல்முறையாக விளம்பரப் படத்தில் நடிப்பதால், இதுபற்றிய பேச்சு சற்று அதிகமாக இருக்கிறது. நடிகர்கள் பலரும் விளம்பரப் படத்தில் நடிப்பது புதிதல்ல என்றாலும், விஜய் சேதுபதி இந்த விளம்பரப் படத்தில் நடித்ததன் மூலமாக அவருக்கு கிடைத்த சம்பளத்தின் ஒரு பகுதியை ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக கொடுத்துள்ளார். 

விஜய் சேதுபதி

சென்னையில் நடந்த விழாவில் இதுபற்றி விஜய் சேதுபதி பேசும்போது, ''கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக அரியலூர் இருக்கிறது. இந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 774 அங்கன்வாடிகளுக்கு தலா 5000 ரூபாய் வீதம் முப்பத்து எட்டு லட்சத்து எழுபது ஆயிரம் ரூபாயும், மேலும், தமிழ்நாட்டில் உள்ள பத்து அரசு பார்வையற்றோர் பள்ளிகளுக்கு தலா ஐம்பதாயிரம் வீதம் ஐந்து லட்சம் ரூபாயும், பதினொரு அரசு செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு தலா ரூபாய் ஐம்பதாயிரம் வீதம் ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயும் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் ஹெலன் ஹெல்லர் என்கிற செவித்திறன் குறைந்தோர் பள்ளிக்கு ரூபாய் ஐம்பதாயிரமும் மொத்தம் நாற்பத்து ஒன்பது லட்சத்து எழுபதாயிரம் ரூபாய் தமிழக அரசிடம் வழங்க முடிவு செய்துள்ளேன். கல்வியில் பின்தங்கிய மாவட்டமான அரியலூரில் இருந்து அதிக மதிப்பெண் எடுத்து டாக்டராக ஆசைப்பட்டு, அது முடியாமல் உயிர்நீத்த அனிதாவின் நினைவாக இந்தத் தொகையை வழங்குகிறேன்'' என்று கூறியுள்ளார். இவரது இந்தச் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!