ஜெர்மனிப் பெண்ணை மணந்த கோவில்பட்டி இளைஞர்!

kovilpatti maariage

’பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும்’ என இயக்குநர் களஞ்சியம் கோவில்பட்டியில் நடந்த திருமண விழாவில் பேசினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த சங்கர நாராயணன் – கோமதி ஆகியோரின் மகன், வைரமயில். பி.இ முடித்த இவர், மேற்படிப்பிற்காக ஸ்வீடன் நாட்டுக்கு சென்று, அங்குள்ள  தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவருகிறார். கலைகளில் ஆர்வம் உள்ள வைரமயில், ’சல்சா நடனம்’ பயில நடனப் பயிற்சிப் பள்ளிக்குச் சென்றபோது, ஜெர்மனியைச் சேர்ந்த பீரிட்ச் என்பவரை சந்தித்துள்ளார். இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. கடந்த ஒரு வருடமாக காதலித்த இருவரும், அவர்களது பெற்றோர்களிடம் சொல்லி, அவர்களின் சம்மதத்துடன், வைரமயில் - பீரிட்ச் ஆகிய இருவருக்கும் இன்று கோவில்பட்டியில் திருமணம் நடைபெற்றது.

முதலில், மணமக்கள் இருவரும் திருவள்ளுவர் படம் சாட்சியாக தமிழ்முறைப்படி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து,  தமிழ்முறைப்படி மேளதாளம் முழங்க தாலி கட்டப்பட்டது. பின்னர், கிறிஸ்தவ முறைப்படி இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். இந்தத் திருமணத்தை இயக்குநர் களஞ்சியம் நடத்திவைத்தார்.

பிறகு, விழாவில் பேசிய இயக்குநர் களஞ்சியம், “தமிழ் இளைஞர்களும் பெண்களும் தமிழ்முறைப்படி திருமணம்செய்துகொள்ள முன்வர வேண்டும். திருமண விசயத்தில், பெற்றோரின் வற்புறுத்தலை பெண்கள்மீது திணிக்கக்கூடாது. பெண்களின் விருப்பப்படியே திருமணம் செய்துவைக்க வேண்டும்.  ஆண்களைப் போல பெண்களுக்கும் சம உரிமை உண்டு. ஆனால், நாம் சம உரிமை அளிப்பதில்லை.  பிறக்கும் குழந்தை ஆண் குழந்தை என்றால் கொண்டாடுவதும் பெண் குழந்தை என்றால் வருத்தப்படுவதும்கூடாது. ஆண்களைவிட பெண்களே எல்லாத் துறைகளிலும் சாதித்துவருகின்றனர். பெண்கள் இல்லாத துறையே இல்லை. வீட்டில் மட்டுமல்லாமல், பணிபுரியும் துறைகளிலும் பெண்கள்தான் சாதனைபுரிந்துவருகின்றனர். அந்தத் துறைதான் நிர்வாகம் முதலான எல்லாவற்றிலும் தொடர்ந்து வளர்ச்சியடைந்துவருகிறது. பெண் என நாமே அவர்களை முடக்கிவைத்து, அவர்களின் சுதந்திரத்தைப் பறித்து, சாதனைக்குத் தடை போடக்கூடாது’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!