வழக்கறிஞர் செம்மணி மீதான தாக்குதலைக் கண்டித்து எஸ்.பி அலுவலகம் முற்றுகை!

வழக்கறிஞர் செம்மணியை அடித்து உதைத்து, கால்களை உடைத்த காவல்துறையினர்மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி, வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினார்கள். 

நெல்லை மாவட்டம் வள்ளியூர் நீதிமன்ற வழக்கறிஞரான செம்மணியை, நவம்பர் 3-ம் தேதி, காவல்துறையினர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, குண்டுக்கட்டாக அவரை வேனில் தூக்கிச்சென்றனர். செம்மணி மீது வழக்குகள் எதுவும் இல்லாத நிலையில், டி.எஸ்.பி மற்றும் இன்ஸ்பெக்டர் தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தில் சில கேள்விகளைக் கேட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அவரை சரமாரியாகத் தாக்கினார்கள். 

ஆர்ப்பாட்டம்

அவரை அடித்து உதைத்ததில், கால்கள் உடைந்தன. ஆனாலும், மருத்துவ சிகிச்சை அளிக்காமல் அவரை வீட்டுக்குச் செல்லுமாறு வற்புறுத்தினர். இந்த விவகாரத்தில், வழக்கறிஞரும் வள்ளியூர் நீதிமன்றமும் தலையிட்டதன் காரணமாகவே தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறார். இதனிடையே, இந்த விவகாரத்துக்குக் காரணமான டி.எஸ்.பி., குமார், பணகுடி இன்ஸ்பெக்டர் ஸ்டான்லி ஜோன்ஸ் மற்றும் தாக்குதல் நடத்திய காவல்துறையினர்மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி, வழக்கறிஞர்கள் வலியுறுத்திவருகின்றனர். 

இதற்காக, நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை வழக்கறிஞர்கள் இன்று நடத்தினர். மதுரை, தேனி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் இதில் பங்கேற்றனர். நெல்லை மாவட்ட எஸ்.பி-யான அருண்சக்தி குமார் விடுப்பில் இருப்பதால், பொறுப்பு எஸ்.பி-யான சுகுணாசிங் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சப்-கலெக்டர் தலைமையில் விசாரணை நடப்பதால், அனைவரையும் கலைந்துசெல்ல வற்புறுத்தினார்.

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

அப்போது, ’வரும் 12-ம் தேதிக்குள் வழக்கறிஞர் செம்மணியைத் தாக்கிய காவல்துறையினர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், 12-ம் தேதியன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருகை தரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அறப்போராட்டம் நடத்தப்படும்’ என அறிவித்தனர். அதைத் தொடர்ந்து, வழக்கறிஞர்கள் போராட்டம் முடிவடைந்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!