’கந்துவட்டிக் கும்பலுக்குத் துணைபோகும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை’: ராமநாதபுரம் எஸ்.பி எச்சரிக்கை

'கந்து வட்டிக்காரர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் காவலர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்தார்.

கந்துவட்டிக் கொடுமையினால் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலைசெய்துகொண்டார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் கந்துவட்டிக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டது.

ராமநாதபுரம் காவல்துறையினர் நடத்திய கந்துவட்டி தொடர்பான புகார் முகாம்


இதைத் தொடர்ந்து, மாவட்டங்கள் தோறும் கந்துவட்டிப் புகார்கள் குறித்து விசாரணை செய்யவும், கந்துவட்டிக்காரர்களிடமிருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து புகார் பெறுவதற்கான சிறப்பு முகாம், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்தது. இந்த முகாமில், கந்துவட்டி மற்றும் நிதி நிறுவனங்களால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து காவல் கண்காணிப்பாளர்  ஓம் பிரகாஷ் மீனா புகார் மனுக்களைப் பெற்றார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’தமிழகத்தில் உத்தரவாதத்துடன்கூடிய கடன் தொகைக்கு 9 சதவிகிதம் வட்டியும், உத்தரவாதம் இல்லா கடனுக்கு ஆண்டு வட்டியாக 12 சதவிகிதமும் மட்டுமே வசூலிக்க அனுமதி உள்ளது. இந்த வட்டி விகிதத்துக்கு அதிகமாக வட்டி பெறுபவர்கள்குறித்து காவல் துறையினரிடம் உரிய சான்றுகளுடன் புகார் அளிக்கலாம். இன்றைய தினம் நடத்தப்பட்ட சிறப்பு முகாமில், கந்துவட்டி மற்றும் கூடுதல் வட்டி தொடர்பாக 8 மனுக்கள் பெறப்பட்டடுள்ளன. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கந்துவட்டி கொடுப்பவர்களுக்கு ஆதரவாக காவல்துறையில் உள்ளவர்கள் செயல்பட்டால், அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!