வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (10/11/2017)

கடைசி தொடர்பு:22:20 (10/11/2017)

புகார்களைத் தெரிவிக்க அதிநவீன ஆப்: டெக்னாலஜியில் அசத்தும் கோவை மாநகராட்சி!

மக்கள், தங்களது புகார்களை எளிதாகவும் விரைவாகவும் தெரிவிப்பதற்காக,  மொபைல் ஆப் ஒன்றை கோவை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சி ஆப்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தையொட்டி, கோவையில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுவருகின்றன. அதன்படி, தமிழத்திலேயே முதல்முறையாக பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மக்கும் பைகளை கோவை மாநகராட்சி அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், மக்கள் தங்களது பகுதிகளில் நிலவும் பிரச்னைகள்குறித்து புகார் தெரிவிக்க, கோவை மாநகராட்சி சார்பில் CCMC (Central Citizens Grievance Redressal App) என்ற ஆப்-பை மாநகராட்சி ஆணையார் விஜயகார்த்திகேயன் தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “மக்கள் தங்களது புகாரை தெரிவிக்க, ஏற்கெனவே மெசேஜ், வாட்ஸ் அப், இணையதளம், ஆப் வசதிகள் உள்ளன. ஆனால், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆப், அதி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆப்பில், புகார் தெரிவிக்கப்பட்ட உடன், புகார் தெரிவிப்பவருக்கு ஒரு ரெஃபரன்ஸ் எண் வழங்கப்படும். அந்த எண்ணை வைத்து, புகாரின் தற்போதைய நிலையை அறிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு பிரச்னையையும் புகைப்படத்துடன் இணைத்துத் தெரிவிக்க வேண்டும். ஆப் மூலமாகத் தெரிவிக்கப்படும் புகார், உடனடியாக தொடர்புடைய அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, பிரச்னை சரிசெய்யப்பட்ட பிறகும், புகார் தெரிவிப்பவருக்கு மெசேஜ் அனுப்பப்படும். குறிப்பாக, இந்த ஆப்பில் Gio – Tagging என்ற வசதி உள்ளது. இதன்மூலம் புகைப்படத்தை இணைக்கும்போதே, அது நம் பகுதியை ட்ராக் செய்துவிடும். கூகுள் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இந்த ஆப்பை டவுண்லோடு செய்து கொள்ளலாம்’ என்றனர்.