தங்கத்தமிழ்ச்செல்வன் வீட்டிற்கு ஐ.டி அதிகாரிகள் எப்போது செல்வார்கள்? | When will IT officers raid at Thanga Tamilselvan house?

வெளியிடப்பட்ட நேரம்: 02:55 (11/11/2017)

கடைசி தொடர்பு:02:55 (11/11/2017)

தங்கத்தமிழ்ச்செல்வன் வீட்டிற்கு ஐ.டி அதிகாரிகள் எப்போது செல்வார்கள்?

டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களி்ல் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் தற்போது வரை அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகிறார்கள். அதன் ஒருபகுதியாக இன்று தினகரன் ஆதரவாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் அலுவலக உதவியாளர் கனகராஜ் என்பவரது வீட்டில் ஐ.டி அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள். இந்நிலையில் கனகராஜை கம்பத்தில் உள்ள தங்கத் தமிழ்ச்செல்வன் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று பிறகு மீண்டும் அவரது இல்லத்திற்கே அழைத்துவந்தனர். தற்போது கனகராஜ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவரும் சூழலில் தங்கத்தமிழ்ச்செல்வன் வீட்டிற்கு ஐ.டி அதிகாரிகள் செல்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக தகவலறிந்த வட்டாரங்களில் விசாரித்த போது, "தங்கத்தமிழ்ச்செல்வனின் நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால், தங்கத்தமிழ்ச்செல்வன் வீட்டில் இருக்கும் அனைவரும் செக்காணூரணிக்கு சென்றுவிட்டார்கள். தற்போது தங்கத்தமிழ்ச்செல்வன் வீட்டில் யாரும் இல்லை. இந்நிலையில், அவர்கள் அனைவரும் இன்று இரவு அல்லது நாளை காலை வீட்டிற்கு வந்தபிறகே சோதனை நடத்த வாய்ப்பிருப்பதாக அறிகிறோம்" என்றனர்.

யாரையும் விட்டுவைக்காமல் டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் அனைவரது இடங்களிலும் சோதனை நடத்திவரும் ஐ.டி அதிகாரிகள், தங்கத் தமிழ்ச்செல்வன் வீட்டிலும் சோதனை நடத்தலாம் என்ற நிலையில், இதனால் தேனியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருப்பதால் போலீஸ் உதவியை நாட வருமானவரித்துறை அதிகாரிகள்  திட்டமிட்டிருப்பதாக தகவலறிந்த வாட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. தங்கத்தமிழ்ச்செல்வனின் வீடு, கம்பம் அருகில் உள்ள நாராயணதேவன்பட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.