வெளியிடப்பட்ட நேரம்: 09:55 (11/11/2017)

கடைசி தொடர்பு:10:49 (11/11/2017)

’சோதனைக்கும் மாநில அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’: கடம்பூர் ராஜு பேச்சு

'வருமான வரிச் சோதனைக்கும் தமிழக அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கடம்பூர் ராஜு

சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் மூன்றாம் நாளான இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் எனக் கிட்டத்தட்ட 180 இடங்களுக்கும் மேல் நேற்று சோதனை நடந்தது. திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள், அங்கு பணியாற்றும் மேலாளர், ஊழியர்களின் வீடுகள் எனத் தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை என மொத்தம் 105  இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இது தவிர ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி என 82 இடங்களில் நடைபெற்றது. மொத்தம் 187 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. மூன்றாவது நாளாக இன்று சென்னை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் சோதனை நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், வருமான வரிச் சோதனைகுறித்து செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், “தற்போது தமிழகத்தில் பல்வேறு நிலைகளில் வருமான வரித்துறையினர் தொடர் சோதனை நடத்திவருகின்றனர். இந்தச் சோதனைக்கும் தமிழக அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. சேகர் ரெட்டி உள்ளிட்டவர்கள் மீது நடத்தப்பட்ட சோதனையில் நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை என்பதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள்தான் விளக்க வேண்டும்” எனக் கூறினார்.