’அவர்கள் என்ன காந்தியின் பேரன், பேத்திகளா?’ - தினகரன் ஆவேசம் | dinakaran speaks out on IT raids

வெளியிடப்பட்ட நேரம்: 11:46 (11/11/2017)

கடைசி தொடர்பு:11:58 (11/11/2017)

’அவர்கள் என்ன காந்தியின் பேரன், பேத்திகளா?’ - தினகரன் ஆவேசம்

'வருமான வரித்துரையினரின் சோதனையை வரவேற்கிறேன்' என தினகரன் தெரிவித்துள்ளார்.

தினகரன்

சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் மூன்றாம் நாளாக  வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் எனக் கிட்டத்தட்ட 180 இடங்களுக்கும் மேல் நேற்று சோதனை நடந்தது. திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள், அங்கு பணியாற்றும் மேலாளர், ஊழியர்களின் வீடுகள் எனத் தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை என மொத்தம் 105  இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இது தவிர ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி என 82 இடங்களில் நடைபெற்றது. மொத்தம் 187 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. மூன்றாவது நாளாக இன்று சென்னை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் சோதனை நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் தற்போது தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்துவருகிறார். தினகரன் கூறுகையில், “வருமான வரித்துறையின் சோதனையை நான் எதிர்க்கவில்லை; வரவேற்கிறேன். எங்கள்மீது குறை சொல்பவர்கள் காந்தியின் பேரன், பேத்திகள் இல்லை. பண்ணை வீட்டில் பாதாள அறை இருப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை. செய்தித்தாள்களில் வெளியானதுபோல பாதாள அறைகள் எதுவும் எங்கள் வீடுகளில் இல்லை. 1800 பேரை கொண்டு தமிழகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன?; சோதனைக்குப் பயன்படுத்திய கார்கள், ஒரே தனியார் நிறுவனத்திடம் வாடகைக்கு எடுக்கப்பட்டது ஏன்? சோதனை, அரசியல் உள்நோக்கத்தில் நடத்தப்படுகிறது எனக் குரல்கொடுத்த அனைவருக்கும் நன்றி” எனக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “குடும்ப உறுப்பினர்களின் வீடுகளில் சோதனை நடத்தலாம்; கட்சியினர் வீடுகளில் ஏன் சோதனை நடத்தப்பட வேண்டும்? உறவினர் வீடுகளில் தங்கம், பணம் பறிமுதல் என்று கூறப்பட்டிருப்பது தகவல்தான். பறிமுதல் செய்யப்பட்டாலே கறுப்புப்பணம் என்று கூறிவிட முடியாது. வருங்காலத்தில் நடைபெறும் தேர்தலில் யார் சிறிய கட்சி, பெரியகட்சி என்பது தெரியவரும்” எனக் கூறினார்.