வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (11/11/2017)

கடைசி தொடர்பு:12:45 (11/11/2017)

மூன்று நாள்களுக்கு மிதமான மழை தொடரும்!

தமிழகத்தில், மேலும் மூன்று நாள்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மழை

தமிழகத்தில், வடகிழக்குப் பருவமழை தொடங்கி தீவிரமடைந்துவருகிறது. கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்தது. இதனால், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கரிலான விவசாயப் பயிர்கள் நீரில் மூழ்கின. தலைநகர் சென்னையும் புறநகர்ப் பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கும் சூழல் ஏற்பட்டது. குடியிருப்புப் பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். கடந்த இரண்டு நாள்களாக மழை குறைந்திருந்த நிலையிலும், பல பகுதிகளில் வெள்ளம் வடிந்தபாடில்லை.

மேலும் மூன்று நாள்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, வட மாவட்டக் கடலோரப் பகுதிகளில் மழை அதிகப்படியாகப் பெய்யும் என்றும், மாநிலத்தில் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்று, அதிகபட்சமாக  வேதாரண்யத்தில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது.