தூத்துக்குடியில் ஐப்பசித் தேரோட்டம் - பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர் | Aippasi festive at Thoothukudi

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (11/11/2017)

கடைசி தொடர்பு:13:40 (11/11/2017)

தூத்துக்குடியில் ஐப்பசித் தேரோட்டம் - பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

தூத்துக்குடியில், பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஷ்வரர் திருக்கோயிலில், திருக்கல்யாணத் திருவிழாவை முன்னிட்டு, இன்று தேரோட்டம் நடைபெற்றது. திருத்தேரில் ரத வீதிகளில் பவனி வந்தார் பாகம்பிரியாள் அம்பிகை.    

thoothukudi therottam

தூத்துக்குடியில் பிரசித்திபெற்ற அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஷ்வரர் திருக்கோயிலில், திருக்கல்யாணத் திருவிழா கடந்த அக்டோபர் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்துவருகிறது.  ஒவ்வொரு நாளும் சுவாமி – அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்று, இரவில் பாகம்பிரியாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வருதல் நிகழ்ச்சியும் நடந்துவருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. 

sri bahambiriyal

இதை முன்னிட்டு, அதிகாலை 6 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகம், விசேஷ தீபாராதனை நடந்தது. பின், மேளதாளத்துடன் கோயிலிலிருந்து திருத்தேருக்கு எழுந்தருளல் நடைபெற்றது. பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க, நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து, நிலையை அடைந்ததும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.  நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை பொற்சுண்ணம் (மஞ்சள் இடித்தல்) வைபவம் நடக்கிறது.

thoothukudi therottam

தொடர்ந்து, தெப்பக்குள சுந்தர பாண்டியர் விநாயகர் ஆலயத்தில் பாகம்பிரியாள் அம்பிகைக்கு குடமுழுக்கு தீர்த்தவாரி மற்றும் தீபாராதனையும் நடக்கிறது. இரவில், சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் பூப்பல்லக்கில் வீதியுலா வருதலும் நடக்கிறது. வரும் 13-ம் தேதி மாலை, சுவாமி – அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து திருக்கல்யாணமும் நடைபெறும். இரவில், சுவாமி – அம்பாள் பட்டினப்பிரவேசம் நடக்க உள்ளது.  வரும் 14-ம் தேதி சண்டிகேசுவரர், பைரவர் பூஜையுடன் திருவிழா நிறைவுபெறும்.    

நீங்க எப்படி பீல் பண்றீங்க