வழக்கறிஞர் செம்மணி மீதான தாக்குதல்: காவல்துறையினர் 6 பேர் சஸ்பெண்ட்!

நெல்லை மாவட்டம், வள்ளியூர் வழக்கறிஞர் செம்மணி மீதான தாக்குதல் காரணமாக பணகுடி இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் உள்ளிட்ட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கறிஞர் செம்மணி

நெல்லை மாவட்டம் மாறன்குளம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் செம்மணியை நவம்பர் 3-ம் தேதி பணகுடி போலீஸார் அத்துமீறி வீட்டில் இருந்து தூக்கிச் சென்று அடித்து உதைத்து காலை உடைத்தனர். இதற்கு நெல்லை மாவட்ட வழக்கறிஞர் மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர் சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். போராட்டங்களும் வலுத்து வருகின்றன.

நெல்லையில் 12-ம் தேதி நடக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டப் போவதாகவும் வழக்கறிஞர்கள் அறிவித்து பரபரப்பை கிளப்பினார்கள். வழக்கறிஞர் செம்மணியை அடித்து உதைத்த காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பது வழக்கறிஞர்களின் கோரிக்கையாக உள்ளது. இதையடுத்து டி.எஸ்.பி குமார், இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் உள்ளிட்ட பலரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

ஆனாலும், வழக்கறிஞர்கள் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து  தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்ததால் பணகுடி இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பின்னர், மாவட்ட ஆட்சியருடன் வழக்கறிஞர் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. அதையடுத்து பணகுடி இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோன்ஸ் மட்டும் அல்லாமல் எஸ்.ஐ-க்கள் பழனி, செல்லத்துரை, சிறப்பு தனிப்படை போலீஸாரான ஜோன்ஸ், நாகராஜன், சந்தனபாண்டியன் ஆகிய 6 பேரும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக நெல்லை சரக டி.ஐ.ஜி-யான கபில்குமார் சராட்கர் உத்தரவிட்டார். இதன் பின்னராவது வழக்கறிஞர்கள் போராட்டம் கைவிடப் படுமா? என்கிற எதிர்பார்ப்பு காவல்துறையினருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!